ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2024

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது...!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்...!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது... அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது...? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா...? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது...?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட... பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது...?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.