என் (ஞானகுரு) காலிலே பல ஆணிகள் உண்டு. காலில் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும். ஒரு சிறிய கல் காலிலே குத்தினால் தலையில் இருக்கக்கூடிய… உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.
கால் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் ஒரு குச்சியை வைத்துக் காலிலே பத்து அடி அடித்தாலே போதும் ஜீவனே பிரிந்து விடும். அப்போது அந்த வேதனை எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு காலிலும் சேர்த்து 26 ஆணிகள் உண்டு…! ஒரு காலடி நான் எடுத்து வைக்க வேண்டும் என்றால் முள்ளிலே கால் வைப்பது போன்று தான் இருக்கும்.
சிலம்பு விளையாடுபவர்கள் எப்படிக் காலடி எடுத்து வைத்துச் செயல்படுகின்றார்களோ அது போன்று பாவ்லா போட்டுத் தான் நடக்க முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் ஊரைச் சுற்றி உலகைச் சுற்றி நான் அனுபவம் பெறுவதற்காகப் போகும் போது… குருநாதர் எம்மை “நீ செருப்பு போட்டு நடக்கக் கூடாது…” என்று சொல்லிவிட்டார்.
1.செருப்பு போட்டு நடந்தால் கஷ்டத்தை நீ உணர முடியாது
2.எத்தனையோ பேர் இந்த உலகிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
3.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணர வேண்டும்.
4.அதை உணர்ந்தால் தான் மற்றவர்களுக்கு நீ உதவி செய்ய முடியும்… அதை நீக்கவும் முடியும்.
ஆகவே… உனக்கு வேதனை வரும் பொழுது அதை நீக்கக்கூடிய உணர்வுகள்… அந்த உபாயங்கள்… அது எப்படி…? என்பதை நீ அறிந்து கொள்ளவே இதைச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.
காலிலே ஆணி என்றாலும் நடக்கும் பொழுது உன் மனது என்ன ஆகிறது…? நீ சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் சென்று என்ன ஆகின்றது…?
ஆணி வந்தவர்கள் கால்கள் எப்படி முடமாகின்றது…? நன்றாகத் தான் இருப்பார்கள் இந்த ஆணிகள் வந்துவிட்டால் உடல் குறுகி நலிந்த நிலை ஆகி விடுகின்றார்கள்… அவரின் மனதும் வேதனைப்படும் உணர்வாகவ ஆகி விடுகிறது.
இப்படி… தன்னை அறியாமலே எந்தெந்த நிலைகள் கொண்டு மனிதர்கள் வேதனைப்படுகின்றனர்…? அந்த வேதனை உருவாகவே எப்படி மாறி விடுகின்றார்கள்…?
இது போன்ற நிலைகளை நீ அனுபவபூர்வமாக அறிந்தால் தான் அதை நீக்க முடியும்…
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகர் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டி அருள் நெறிப்படி
5.நாம் எதை எண்ண வேண்டும்… எதனை நாம் பருக வேண்டும்…?
6.எதனை நாம் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
7.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
8.ஞானிகள் உணர்வினை வினைக்கு நாயகனாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்ற நிலையை
9.என் காலில் ஆணி இருக்கின்ற வரையிலும் நடந்து பல நிலைகளைச் செயல்படுத்தினார் குருநாதர்.
மகரிஷிகள் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றி விண்ணுலகில் இன்று சுழன்று கொண்டிருக்கிறார்கள். தீமையை அகற்றிய நிலைகள் அவர் உடலில் விளைய வைத்த சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது.
அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்தார். இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்து ஞானிகளின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார்.