ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2024

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.