ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2024

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

எல்லா உயிரையும் ஈசனாக மதி…! அந்த உடல்களை ஆலயமாக மதி… அந்த ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் உயர்ந்த குணங்களை மனிதனாக உருவாக்க உதவிய நற்குணங்களை எல்லாம் தெய்வமாக மதி.

ஒவ்வொரு மனிதனும்… அவன் தீமையிலிருந்து அகன்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்… “நீ பிரார்த்தனை செய்…”

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எதைப் பிரார்த்தித்தேனோ… எதை உபதேசித்தேனோ
2.எவ்வாறு அதையெல்லாம் நீ கூர்ந்து கவனித்தாயோ அந்த உணர்வுகள் அனைத்தும் உனக்குள் பதிவாகி
3.அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது
4.நான் கூறிய உணர்வையும் நான் உணர்த்திய உணர்வையும் நீ பெறும் தகுதி பெறுகின்றாய்.

கீதையின் சாரத்தை” அன்று வியாசகர் உணர்த்தியது போன்று… நான் உனக்கு உபதேசித்ததை நீ எடுக்கப்படும் போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!”

ஆகவே… பிறருடைய தீமைகளை அகற்றி அதிலிருந்து அவர்கள் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு.

நான் உனக்கு உபதேசித்து உணர்த்திய ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைப் பருக வேண்டும் என்று நீ எண்ணு.
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நீ அதைப் பெறுவாய் என்றால்
3.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது… அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியை நீ பெறுகின்றாய்.

மெய் ஞானிகள் உணர்வை நீ பெறும் பொழுது அது உனக்குள் விளைந்து சொல்லாக வெளிப்படும் போது அதைக் கேட்பவர் உணர்வுளிலும் ஆழமாகப் பதிகின்றது.

ஆழமாகப் பதிந்த பின் அவர்களை மீண்டும் அதை நினைவு கொள்ளும்படி செய். அவர்கள் எப்போது நினைவு கொள்கின்றனரோ அந்தத் தீமையிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு நான் உணர்த்திய உணர்வை
3.அதன் துணை கொண்டு நீ கண்டறிந்த அறிவிந் ஞானத்தை எல்லா மக்களுக்கும் உபதேசி.
4.அவர்களுக்குள் அது பதிய வேண்டும் என்று நீ செயல்படுத்து
5.அருள் ஞானிகள் உணர்வை அவர்கள் பெறும் தகுதியாக அந்த உணர்ச்சிகளை அவர்களுக்குத் தூண்டு.

அதன் வழியில் அவர்கள் அதைப் பெற்றார்கள் என்றால் அவரை அறியாது உள் புகுந்த தீமைகளை அகற்ற இது உதவும்.

காரணம்… அவர்களுடைய நல்ல குணத்தால் உயர்ந்த பண்பால் பரிவால் பிறரைக் காத்திடும் நிலைகள் கொண்டு… பிறரைக் காத்திடும் செயலாகச் செயல்பட்டாலும் பிறர் படும் துயரத்தின் உணர்வுகள் நுகர்ந்தறிந்தே அவர்களால் செயல்பட முடிகின்றது. அந்தத் துயரங்களை நுகர்ந்தறிந்த பின்
1.அதிலிருந்து பிறரை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தும் அந்த நல்ல மனிதர்களுக்குள்
2.அவரை அறியாது அந்த தீமைகள் புகுந்து விடுகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டது போன்று… நல்லவையாக இருக்கும் இந்த உணர்வுக்குள் விஷம் கலந்த பின் அவர்கள் செயலற்றதாக ஆகிவிடுகின்றனர்.

1.பிறரைக் காக்கின்றனர்… ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றன.
2. நான் கொடுக்கும் உபதேசத்தினை அத்தகைய நல்லோரைக் காத்திடும் தன்மைக்கு நீ பயன்படுத்த வேண்டும்
3.தீமையை அகற்றிடும் செயலாக “எனது வாக்கு” உனக்குள் இருந்து வேலை செய்யும்.

ஆகவே ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று அந்த உடல்களை நினைத்து அந்த உடலில் இருக்கும் உயர்ந்த குணங்களைக் காத்திடும் நிலையாக…
1.நான் சொன்ன உபாயத்தின்படி விண்ணை நோக்கி நீ ஏகி அந்த உணர்வின் தன்மை பருகி
2.அதனை நீ சொல்லாக வெளிப்படுத்தி கேட்பவர் உணர்வுக்குள் அருள் ஞானிகளின் வித்துக்களை ஆழமாகப் பதியச் செய்.

யாரெல்லாம் நீ சொல்வதைப் பின்பற்றித் தொடர்ந்து செய்து வருகின்றார்களோ… தீமை அகற்றிடும் சக்தி அவர்கள் பெறுகின்றனர்.

அவர்கள் பெற வேண்டும் என்று நீ அவர்களை நினைத்துத் தியானித்தாய் என்றால் அவர் எண்ணும் பொழுது அவர்களுக்கும் தீமை அகற்றும் சக்தி கிடைக்கின்றது.

ஒரு நெலைச் சமைத்து யாரும் அதை உணவாக உட்கொள்ள முடியாது நீ ஒருவனாக இருப்பினும் ஒரு நெல் மற்றவர்கள் பசியைப் போக்க உதவாது.

மற்றவர்கள் உணர்வுகள் எண்ணங்களை ஒருக்கிணைத்து…
1.உயர்ந்த எண்ணங்களை எல்லோரையும் வளர்க்கச் செய்து
2.அந்த அருள் ஆற்றல் மிக்க நிலைகளை “பெரும் குவியலாக” நாம் சேர்க்க வேண்டும்.

அனைவரும் தெரிந்து தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணி ஏங்கி…
1.நான் உனக்குக் கொடுத்த உபதேசத்தின் சக்தியை
2.அதன் மூலம் நீ பெற்ற அந்தத் தகுதியினை…
3.எல்லோர் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிவு செய்து
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் அனைவரையும் நீ ஒருங்கிணைத்து வலுப்பெறச் செய்.

அவர்கள் எல்லோரும் வலு பெற வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ அதைப் பெறுகின்றாய். எல்லோரும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கி எண்ணுகின்றாயோ அது அனைத்தையும் பெறும் தகுதியை நீ பெற்று… உனக்குள் விளைந்து… அது சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்பார் உணர்வுகளிலும் அது பதிவாகி அவர்கள் அறியாத வந்த தீமைகளை நீக்கிடும் செயலாக ஆகின்றது.

குருநாதர் எனக்குக் கொடுத்த அனைத்தையும்… அப்படியே உங்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன் (ஞானகுரு).