ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2024

தியானம் செய்கிறோம்…! இருந்தாலும் தீய எண்ணங்கள் வருகிறதே… என்று நினைக்கலாம்

மழை பெய்யாத காலங்களில் “கட்டாந்தரை” போன்று இருப்பினும் மழைக் காலம் வந்து மழை பெய்தபின் மண்ணிற்குள் மறைந்துள்ள வித்துகள் அனைத்தும் தழைத்துப் புல் பூண்டுகளாக எழுந்து வளரத் தொடங்குகிறது.

1.இதைப் போன்று தான் நம் உடலில் ஏற்கனவே பதிவான அணுக்களின் இயக்கங்களும்
2.இப்பொழுது செய்யக்கூடிய தியானத்தால் அவைகளை மாற்றி அமைத்தாலும்…
3.அவைகளுக்கு வேண்டிய சத்து கிடைத்தால் மீண்டும் கிளர்ந்தெழத் தான் செய்யும்.

காரணம்… சோர்வு சஞ்சலம் சலிப்பு குரோதம் வெறுப்பு பயம் போன்ற உணர்வுகளை பதிவு செய்திருக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்துக்களாக நமக்குள் இருக்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு சோர்வுடன் இருப்பவரை உற்று நோக்கினோம் என்றால்…
1.ஊழ்வினையாக உள் இருப்பதற்கு நம் கண் மீண்டும் உஷாராக்கி அந்த உணர்வுகளை ஜீவன் கொடுத்துவிடும்.
2.அதை நுகரும் பொழுது நம்மை அறியாமலே அந்தச் சோர்வு வரத் தொடங்கும்.

அத்தகைய நேரங்களில்… மீண்டும் வளர விடாது அவைகளைத் தடுப்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சிகள்… மற்றொருவர் திட்டியது நாம் வெறுப்படைந்தது… இது எல்லாமே ஒருவரைப் பார்த்த்தும் நம் நினைவுக்கு வரும்.

“எவ்வளவு தியானம் எடுத்தாலும் கூட…” ஒருவர் மீது நாம் வெறுப்படைந்த உடன் அந்த உணர்வை நுகர்ந்த பின் கண்ணின் கருவிழி பதிவாக்கப்படும் பொழுது உள்ளே பதிவான வித்திற்கு அது உஷாராக்கி விடுகிறது.
1.அப்போது அதற்குண்டான ஆகாரமாக அதை எடுத்து வளரத் தொடங்குகிறது.
2.உணர்வை இழுத்த பின் (சுவாசித்ததும்) உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் எண்ணங்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கும்.

இவ்வளவு நாள் தியானம் செய்கின்றோம்… இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றதே…! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது வரும் பொழுது அதை இப்போது நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஒருவர் மீது வெறுப்படைவதோ சலிப்படைவதோ கோபப்படுவதோ அத்தகைய உணர்வுகள் வருகிறது என்றால்… உடனே அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவினைக் கண்ணுக்குக் கொண்டு வந்து உயிருடன் இணைத்து விடுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது மிகச் சக்தி வாய்ந்தது.

உள்ளுக்கே ஏற்கனவே பதிவு செய்த பகைமை உணர்வோ வெறுப்பு உணர்வோ அதனுடன் இதைக் கலக்கப்படும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் ஈர்க்கப்படுவதை இது தடைப்படுத்துகின்றது.
2.வந்தாலும் அதை அடக்கித் தீமை இல்லாத அணுக்களாக அது விளையச் செய்யும்.

அத்தகைய அணுக்களாக நாம் மாற்றிக் கொண்டே வந்தால் நம்முடைய எண்ணங்கள் கூர்மையாகத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது.

இந்த வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த அணுக்களும் வளர்ச்சி பெறும். ஆகையினால் நாம் இடைவிடாது அதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் தொழிலில் எல்லாம் நலமாக இருப்பினும் ஒருவர் என் வியாபாரம் நஷ்டமாகி விட்டது… ஒரே கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னால் போதும்.

கண் அவரைப் படம் எடுத்த பின் அந்த உணர்வின் சக்தியை நுகர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று உணர்கின்றோம். இருப்பினும் அந்த உணர்வுகளை நமது உயிர் அணுவாக மாற்றி விடுகின்றது.

ஏற்கனவே கஷ்டம் நஷ்டம் என்று சொன்ன உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.
1.அதற்கு இடம் கொடுக்காது இருந்தால் ஈர்க்கும் சக்தி குறைகின்றது.
2.இடம் கிடைத்துவிட்டால் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தியாக நமக்குள் வந்து விடுகிறது.

புதிதாகப் பார்க்கப்படும் பொழுது ஊழ் வினையாக முளைத்து விடுகின்றது பின் அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுவின் தன்மையாக விளைகின்றது.

அணுவின் தன்மை விளையப்படும் பொழுது நாம் நுகர்ந்தது இரண்டாவது அதே உணர்வுகள் உயிரிலே உராயப்படும்போது இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆகையினால் அத்தகைய எண்ணங்கள் நமக்கு வராதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் மையம் கொண்டு நிலை நிறுத்தி விட வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இடைமறிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி இணைக்கப்படும் பொழுது தீமை செய்யும் அணுக்கள் வலு இழக்கின்றது… அருள் உணர்வுகள் வலு கூடுகின்றது
1.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர்ந்த சக்திகளை
2.புதுப் புது அணுக்களாக நாம் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தியானம் செய்பவர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்