ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2024

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்...” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா...?

குரு என்றாலே “ஒளி நிலை...” என்பது பொருள்...!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி... உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்...!” என்ற நிலை இல்லையப்பா...!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்...! என்ற சொல்லும் எதற்கப்பா...?

“தனித்துவமான சக்தி...” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்... மாமகரிஷிகளின் ஆசியுடன்... “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை...” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது...?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்... சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்... கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே...?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்...! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே...?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்...? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.