ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2024

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்... பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி... அறிவொழிந்து...! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்...! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை...!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி... ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு... பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்... பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்... அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்...!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்...!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த... தான் பெற்ற தன்மை கொண்டு... ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது...” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை...” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே...” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்...!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி...”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.