பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு உபதேசிக்கின்றான். நுகர்ந்த உணர்வுகள் மனைவி உடலில் விளைகிறது.
ஆண் பெண் என்ற நிலையில் இணைந்து தன் இனத்தை விருத்தி செய்யும் நிலையாகக் குழந்தைகள் இன்று எப்படி உருவாகின்றதோ இதைப் போன்று தான்
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து… இரு உயிரும் ஒன்றாக்கப்பட்டு…
2.நஞ்சினை வென்றிடும் உணர்வாக இருவரும் விளைவித்துக் கொள்கின்றனர்.
3.ஒளிக்கதிர்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றனர்.
அதாவது… அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… கணவன் உயர வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… தனது வாழ்க்கையில் கண்டறிந்த உணர்வுகள் அனைத்தும்
1.கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த அருள் எனக்குள் வளர வேண்டும் என்றும்…
2.மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும்… என்று அந்த அருள் ஒளி எனக்குள் கூட வேண்டும் என்றும்
3.இருவருமே இந்த உணர்வுகளை எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.இரு உயிரையும் ஒன்றாக இணைத்திடும்… ஈர்த்திடும் உணர்வுகள் ஒன்றிடும் பருவத்தை அடையச் செய்கின்றது.
இப்படி அடைந்த உணர்வுகள் தான் உடலை விட்டுச் சென்ற பின் சத்தியவான் சாவித்திரி…! இன்னொரு உடலுக்குள் அழைத்துச் செல்லாது “ஏகாந்த வாழ்க்கை” வாழும் நிலை பெற்றனர்.
ஆகவே உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒன்றி வாழும் பொழுது “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…”
நம் பூமிக்குள் வரும் அந்த உணர்வினைக் கூர்மையாக உற்றுப் பார்த்து இருவருமே ஒன்றாக அந்த உணர்வை ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வினை அவர்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் அணுவாக வளர்த்துக் கொண்டார்கள்.
அவ்வாறு வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி…
1.தான் நுகரும் உணர்வுகள் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக…
2.“இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளிக்கதிராக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…”
அணுக்களாகி… வளர்ச்சியில் கோளாகி… கோள் நட்சத்திரங்களாகி… நட்சத்திரம் சூரியனாக எப்படி ஆனதோ இதைப் போன்று தான் உயிரணுவாகி… பல கோடிச் சரீரங்கள் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனித உடலை உருவாக்கி… மனிதனான பின் “தன் எண்ணத்தால்” உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.
சூரியன் ஆனபின் தான் மற்றொன்றைத் தனக்குள் வளர்த்து தீமைகள் அகற்றி ஒளியின் சுடராக மாற்றுவது போன்று உயிரணு மனிதனாகத் தோன்றிய பின்… அனைத்தையும் ஒளியாக்கும் தகுதி பெற்றது தான் அது.
சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் ஒவ்வொரு பொருளும் உருவாகின்றது. ஆனால் மனிதனான பின் ஒன்றைக் கவர்ந்து உருவாக்கும் திறன் பெற்றவன்.
அத்தகைய திறன் பெற்ற நாம்… அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.
அதற்காக வேண்டித் தான் அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சி அருள் ஞானிகள் பெற்ற உணர்வினைப் பெறும்படி செய்கிறேன் (ஞானகுரு).
அதே சமயத்தில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் சென்று
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருக்கும் அதனுடன் உங்கள் நினைவினை இணைக்கச் செய்து
3.கூர்மையாக நினைவாக்கி அதைக் கவரும் பருவம் உங்களுக்குள் ஆக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது தீமையை விளைவிக்கும் அணுக்களுக்கு அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் இரையாகி
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகள் அகன்று “ஞானத்தின் வழியில் வளர்ச்சி பெறும் தகுதி பெறுவீர்கள்…”