ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2024

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சியாகிக் கண்கள் தோன்றிய பின்… ஒவ்வொன்றிலும் “தான் நல்லது என்று நினைத்து…”
1.தன்னைப் பாதுகாக்கும் உணர்வைப் பார்த்துப் பார்த்துத் தான் சுவாசித்த உணர்வின் தன்மை
2.”பாதுகாக்கும் உணர்வை விளைய வைத்து… அந்த வித்தின் சத்தைத் தொடர்ந்து தனக்குள் கூட்டிக் கொள்கிறது…”

அவ்வாறு ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட விளைவின் தன்மை அனைத்தும்… உயிருடன் ஒன்றித் தனதாகின்றது. இதனால் தான் மனித உடல் பெறுவதற்கு முன்
1.முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த உயிர் என்று
2.அதைப் பத்து அவதாரம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.மனித உடலுக்குள் உயிரின் தன்மை கொண்டு வந்தபின் நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

அன்று ஒரு அசுரன் (விஷம்) எனக்கு எதிலுமே அழிவில்லை என்று விஷ்ணுவிடம் கேட்கின்றான். வானத்திலும் அழிவில்லை… மூன்று உலகிலும் எந்த விதமான அழிவும் இருக்கக்கூடாது… மிருகத்தாலும் நான் சாகக்கூடாது… மனிதனாலும் நான் சாகக்கூடாது என்ற வரத்தை வாங்கிக் கொண்டு வருகின்றான்.

எதிலுமே ஊடுருவக்கூடிய சக்தி தான் விஷம் (தீய சக்தி எதிலுமே ஊடுருவும்). பால் தூய்மையாக இருக்கிறது என்றாலும் அது சத்து உள்ளது தான் ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால்… பாலின் சத்து அனைத்துமே இழக்கச் செய்து… விஷம் தனது கவர்ச்சிக்குள் வைத்துவிடும்.

இதே போன்றுதான் விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள்… சூரியன் ஆனாலும் “இயக்கச் சக்தியாக” தனக்குள் அடக்கி வரும் பொழுது அது செயல்படுத்துகிறது.

ஒருவர் தவறு செய்கின்றார் அல்லது ஒரு குழந்தை தவறி கீழே விழுகிறது என்றால் அதை நாம் நேர்முகமாகப் பார்க்கப்படும் பொழுது ஊடனே வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனை என்ற விஷம் உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அசுரன் நமக்குள் புகுந்து நல்லதை அவனுக்குள் அடிமையாக்கச் செய்கின்றான். இந்த உட்பொருளைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுப்பதாக காண்பிக்கப்பட்டு மிருகத்திலும் சேர்ப்பில்லாதபடி மனித உடலிலும் சேர்ப்பில்லாதபடி ஆகாயத்திலும் இல்லாத படி பரந்த வெளிகளிலும் இல்லாத படி வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகள் கொண்டு
2.இந்த உயிரிலே மோதும் நிலைகள் நமக்கு வாசல்படி மூக்கு

நாராயணன் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான். இந்த உடலுக்குள் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தியாக நமது உயிர் இருக்கின்றது.

ஆகையினால் நர நாராயணன்…! இந்த வாசல்படியில் அமர்ந்து அசுர உணர்வின் வேட்கைகளை உள்ளே நுழையாத வண்ணம் தீய உணர்வின் தன்மையை மாய்த்து விடுகின்றான்.

அதாவது
1.உயிரின் பால் (புருவ மத்தியில்) கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.ஆற்றல் மிக்க மகரிஷிகளின் துணை கொண்டு வாசல்படியில் வைத்து அசுர உணர்வுகளை மாய்த்து விட்டால்
3.நல்லதைக் காத்துக் கொள்ள நம்மால் முடிகிறது.

மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஒளியின் சக்தியைத் தனக்குள் கூட்டி ஆற்றல் மிக்க நெருப்பாகக் கூட்டி… அந்த நெருப்புக்குள் தீய விஷத்தின் தன்மை மாய்த்தால் அது தான் நரசிம்ம அவதாரம் என்பது. பத்து அவதாரத்தில் இது முக்கியமானது. மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்.

1.இந்த ஆற்றல்மிக்க சக்திகளை எவர் ஒருவர் பெறுகின்றனரோ
2.அவரே நாராயணன் தொடர் கொண்ட ஒளியின் சிகரமாகப் பெற முடியும்.

மகாபாரதத்திற்குள் அன்று வியாசக பகவான் இவ்வளவு தெளிவாக நமக்குக் கொடுத்துள்ளார் நரசிம்ம அவதாரம் என்றால்… கடவுள் எங்கோ இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான்… என்று நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.