ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2024

உயிர்க் காற்று

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது...!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது... செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.