உயிர் தோன்றி அணு தோன்றி சூரியனாக வளர்ச்சி பெற்றது வரையிலும்… சூரியனின் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உபதேசிக்கின்றோம்… உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.
தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி அதனின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் அனைவரும்
1.அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பின் துணை கொண்டு அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
2.அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் இந்த உயிரான்மாக்களின் மீது படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றன.
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கி விடுகின்றது.
அந்தக் காலங்களில் இவ்வாறு விண் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
எண்ணிலடங்காதவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு பிறவியில்லா நிலை அடைந்துள்ளார்கள்.
1.ஏனோ காலத்தால் பக்தி என்ற நிலையாக அது மாற்றப்பட்டு மனித உடலின் இச்சைக்கு என்றே மாற்றிவிட்டார்கள்.
2.உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய் விட்டது… மெய்யின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தப்பட்டது.
இதைக் கேட்டறிந்த அனைவரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் இனியாவது இதன் வழி தியானியுங்கள்.
அருள் வழியை உங்களுக்குள் பெருக்குங்கள். இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள். ஒளி பெறும் அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.
அருள் மகரிஷிகளின் உணர்வைத் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் முன்னோர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள்.
அவர்கள் முன் சென்றால் பின் நாமும் அங்கே செல்கிறோம். அந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.
1.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம்
2.இருப்பிடத்தில் இருந்து கொண்டே எதையும் நுகரலாம்… அருள் ஒளியின் தன்மையைப் பெறலாம்.
இந்த மனித உடலில் இப்போது நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பெருக்கி ஒளியின் சரீரமாக உருவாக்குங்கள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உபதேசிக்கின்றோம். உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
1.உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்குச் செலுத்தச் செய்கின்றோம். அந்த உணர்வைப் பெறத் தகுதி ஏற்படுத்தினோம்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது…
3.உணர்வின் ஆற்றலைப் பெருக்குகின்றது… நினைவின் எண்ணம் கூர்மையாகின்றது.
அதன் வலிமை கொண்டு எதன் மீது நினைவைக் கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ அங்கே அழைத்துச் செல்கின்றது இந்த உயிர்.
ஆகவே… நம்முடைய கூர்மை துருவ நட்சத்திரத்தின் மீதும் சப்தரிஷி மண்டலங்களின் மீதும் இருத்தல் வேண்டும். கூர்மை அங்கே இருந்தால் நாம் எந்த நேரத்தில் உடலை விட்டுச் சென்றாலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி பெறும் உணர்வாக விளைந்து பேரின்பப் பெருவாழ்வு அடைவோம்.
ஆகவே… இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றவருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.