ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2024

உயிர் வழி சுவாசம்

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்...” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக...!” (உயிர்) அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது...! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்...!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி...” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்...” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி - சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்...” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.