ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2024

குலதெய்வ வழிபாடு

இன்று மனிதனாக இருந்தாலும் இதற்கு முன்… நாம் தேளாகவோ பாம்பாகவோ இருந்திருப்போம் அதனிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நம் தாய் தந்தையர் அடித்திருப்பார்கள் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமது உயிர் அவர் உடலில் புகுந்து விடுகின்றது.

ஆகவே…
1.நம்மை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தவர்கள் தாய் தந்தையரே… அவர்களே “கடவுள்”
2.நம்மைக் காத்தருளிய நம் தாய் தந்தையரே “தெய்வம்”
3.நல்வழி நமக்குக் காட்டிய தாய் தந்தையரே “குரு”
4.என்னை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்து ஆளாக்கி நல்வழி புகட்டியது என் அன்னை தந்தையரே என்று எண்ணி
5.என் தாய் தந்தையர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
7.எங்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அன்னை தந்தையரின் அருளாசி என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் ஆலயத்தில் எண்ணும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஆலயத்திற்குச் சென்று இப்படி யாராவது வணங்குகின்றோமா…? இல்லை…! நம் உயிரை மதிப்பது இல்லை… அம்மா அப்பாவிற்கு உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுவதில்லை...!

ஆனால் கந்த புராணத்திலே இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்

நாரதன் ஞானக்கனி கொண்டு வந்து கொடுப்பதாகவும்… “உலகை முதலில் வலம் வருபவருக்கே இதைக் கொடுக்கலாம்…” என்றும் உணர்த்துகின்றார்கள்.

விநாயகர் என்ன செய்கின்றார்…?
1.அம்மா அப்பாவைச் சுற்றி வந்து உடனே கனியை வாங்கிக் கொள்கின்றார்.
2.சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகச் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

அதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

ஆனால் முருகன் என்ன செய்கின்றான்…? விரிவடைந்த உணர்வின் தன்மை கொண்டு அலைந்து நான் பெறுவேன் என்று செல்கின்றான். ஆனால் விநாயகன் முந்திக் கொண்டான்
1.உடலான சிவனில் ஒன்றிக் கொண்டான்
2.உடலுக்குள் இருந்த சக்தியின் சொரூபத்தில் இவன் ஒன்றிக் கொண்டான் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

விரிவடைந்த எண்ணத்தின் நிலைகள் அனைத்திலும் எண்ணி எடுத்து இந்த உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும் என்றவன் முருகன். ஆனால் பின் வந்தவர்கள் அந்த்த் தெளிவுரைகளை மறைத்தே விட்டார்கள்… அந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.

கொசு நம்மைக் கடிக்கிறது… இரத்தத்தைக் குடிக்கிறது. அது மடிந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகிறது… மனிதனாக உருப்பெறும் கருவாகின்றது. ஒன்றைக் கொன்றால் உடனே தாக்கும் நிலை கொண்டு நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

உணர்வை எடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

இயற்கையின் செயலாக்கங்களை நீ எப்படிப் பெறுகின்றாய்…? என்பதை எனக்கு இப்படித் தான் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்.
1.நீ மனிதனாக ஆனாய்…! எதன் வழி கொண்டு…?
2.உனக்குக் கடவுள் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
3.உனக்குத் தெய்வம் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
4.உனக்கு குரு யார்…? வாழ வழி வகுத்துக் கொடுத்து நல்வழி காட்டியது யார்…? உன் அன்னை தந்தை தான்
5.உன் அன்னை தந்தையரை உருவாக்கியது யார்…? அவருடைய அன்னை தந்தையர்
6.ஆகவே அந்தக் குல வழியில் தான் நீ மனிதனாக ஆனாய்… என்று தெளிய வைத்தார் குருநாதர்.

அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள்… ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் (சப்தரிஷி மண்டலம்) இணைய வேண்டும்.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
2.என்றென்றும் அறிவின் ஒளியாக இருக்க வேண்டும்
3.உணர்வின் அறிவாக நாங்கள் அதைப் பெற வேண்டும்
4.எங்களை அறியாது வந்த இருளை அகற்ற வேண்டும் அந்தத் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.குலதெய்வங்கள் மூதாதையர்களை விண் செலுத்தும்படி சொன்னார் ஈஸ்வரபட்டர்..

அதைத் தான் உங்களுக்கும் சொல்கிறோம் (ஞானகுரு).