ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2017

மனிதனுடைய ஆணிவேர் அவனுடைய சுவாசம்தான் – அகஸ்தியர் அருளிய விநாயக தத்துவம்

1. கணங்களுக்கு அதிபதி கணபதி - விளக்கம்
நாம் மகிழ்ச்சியான நிலைகளில் வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி “இப்படிப் பேசுகின்றானே.., அப்படிப் பேசுகின்றானே..,” என்று பிறர் பால் நம் எண்ணங்களைச் செலுத்திவிட்டால் புளிப்பின் சத்தை அடைந்து நாம் எதைக் கண்டாலும் சலிப்படைந்து கொண்டே இருப்போம்.

சலிப்படையப்படும் பொழுது உங்கள் உடலில் உமிழ்நீர் சுரக்கின்றது.

மாங்காயை நீங்கள் வெயில் காலத்தில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? எச்சில் ஊறும். “மாங்காய்” என்று சொல்லும் பொழுதே…, உங்களுக்கு எப்படி உமிழ்நீர் சுரக்கின்றது?

இதைப்போலத்தான் நாம் அடிக்கடி சலிப்பு என்ற எண்ணங்களை எண்ணுவோமேயானால் சலிப்பான எண்ணங்கள் தான் இருக்கும். எதைக் கண்டாலும் சலிப்பாக இருக்கும். இருப்பினும் நாம் சுவாசித்த உணர்வுகள் அது சேர்ந்து உமிழ்நீராக அதிகமாகச் சேரும்.

1.சலிப்பான உமிழ்நீர்கள் அதிகமாகச் சேர்ந்தவுடனே
2.இப்படிச் செய்தானே என்ற கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.
3.கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்பொழுது சலிப்பால் ஏற்பட்ட உமிழ்நீர்  “உறையும் தன்மை” அடைகின்றது.
4.அது சளி போன்று கெட்டியாக மாறும்.

ஆக, சளியாக மாறும் பொழுது இந்தச் சலிப்பின் தன்மை அதிகமாக அது உமிழ்நீரை அதிகமாகச் சுரக்கச் செய்ய சுரந்த உமிழ்நீர் உறையச் செய்ய, உறைந்த நிலைகள் சுவாசப்பைகளில் உறைந்த பின் “ஆஸ்த்மா” போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

எவரொருவர் சலிப்பும் சஞ்சலமும், அதிகமாக எண்ணத்தில் எடுக்கின்றனரோ அவர்களுக்கு இந்த உணர்வின் நோய் நிச்சயம்  வரும்.

நாம் தவறு செய்யவில்லை

நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வு ஆன்மாவாக மாறும் பொழுது ஒரு குழம்புக்குள் புளிப்பை அதிகமாகப் போட்டால் அந்தப் புளிப்பின் சுவை இருப்பது போல நமது ஆன்மாவில் “புளிப்பின் சுவையே” முன்னிலையில் நிற்கும்.

இதைத்தான் விநாயக தத்துவத்தில் “கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்லுவார்கள். நமது உடலில் எத்தனை குணங்கள் இருந்தாலும்
1.புளிப்பான உணர்வை நாம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
2.நமது உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்கு எல்லாம் அதிபதியாகி,
3.அடிக்கடி புளிப்பாகப் பேசுவதும்
4.சலிப்பான நிலைகளைச் செயல்படுத்தும் நிலை வந்துவிடும்.

2. நாம் சுவாசிக்கும் "சுவாசம்தான்" நம்மை வாகனமாக அழைத்துச் செல்கின்றது (மூஷிகவாகனா)
நாம் இப்படிச் சலிப்பான குணத்தைச் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் சத்து அதிகமாகி புளிப்பான செயல்கள் செயல்படும் பொழுது அந்த குணமே இந்த உடலை அழைத்துச் செல்லும். இந்த உடலுக்குள் உணர்வுகளை இயக்கிக் காட்டும். அதனால்தான் ‘’மூஷிகவாகனா’’.

எலி என்ன செய்கின்றது?

ஒரு நிலத்திலே தனக்கு வேண்டிய வீடு வசதியாக ஏற்படுத்திக் கொள்கிறது. சமமாக இருக்கும் நிலத்தில் அது “வளை” அமைத்துக் கொள்கிறது. நிலத்தின் சமமான நிலைகளை அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போல நமக்குள் இருக்கும் குணங்கள் அனைத்தும் நாம் அடிக்கடி, சலிப்பு என்று புளிப்பான செயல்களைச் செய்வோமேயானால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி அந்தப் “புளிப்பின் உணர்வுகள் வளை அமைத்துக்கொள்ளும்”.

புளிப்பின் உணர்வின் தன்மை அடையப்படும் பொழுது அதிகமாகவே உமிழ்நீர் சுரக்கும். ஆஸ்த்மா போன்ற நோய்களும் வரும். வாயிலே ரணங்கள் வரும். சோறு சாப்பிட்டாலும் சாப்பிடமுடியாது. வயிறு நிறைந்த மாதிரி இருக்கும்.

அதே சமயம் கை, கால் குடைச்சல் வரும். நம்மை அறியாமலேயே கோப உணர்வுகளைத் தூண்டும். ஆக மீண்டும் உமிழ்நீர் சுரக்கும், மீண்டும் அது உறையச் செய்யும். சளியின் தன்மை அதிகமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கணங்களுக்கு அதிபதி கணபதி என்பது போல சலிப்பின் தன்மை அதிகமாக இருந்தால் எல்லாக் குணங்களுக்கும் அதிபதியாக மாறி புளிப்பின் செயலை நமக்குள் செயல்படுத்தும்.

இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக விநாயக தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது, விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு (மூஷிகவாகனா) ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.

நாம் அடிக்கடி சலிப்பான எண்ணங்களை எடுப்போமென்றால் அந்தப் புளிப்பான குணங்களே வாகனமாக நின்று இந்த உடலின் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத்தான் விநாயக தத்துவத்தை ஞானிகள் தெளிவுற எடுத்துரைத்துள்ளார்கள்.

3. நாம் எதை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்?
ஆகவே, அந்த அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழிப்படி
1.நாம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் சுவாசமாக்கி, (மூஷிகவாகனா)
2.அதை நமக்குள் வளர்த்து இந்த உடலிலே கணங்களுக்கு அதிபதி கணபதி
3.மகரிஷிகளின் அருளை அதிபதியாக்குவோம்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் சென்ற பாதையிலேயே நாமும் செல்வோம்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம். இந்த உலக மக்கள் அனைவரும் அந்த நிலை பெற தவமிருப்போம்.