ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2017

மனத் தூய்மையும் உண்மையான தெய்வ பக்தியும்

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அதைக் கேட்டுக் கொண்ட பின் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் சிறிது நேரத்தில் உடலில் பிசு பிசு என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதை நாம் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்?

1.அதே சமயத்தில் ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.
2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.
3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.
4.நீங்கள் குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “உங்கள் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

நீங்கள் எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. ஆக எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் ஈஸ்வரா என்று தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

தூய்மைப்படுத்தியபின் நாம் எதை எல்லாம் எண்ண வேண்டும்?

முதலில் சொன்ன மாதிரி மகரிஷிகளின் அருள் சக்தியை ஒரு பத்து நிமிடம் உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். பின் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவது தியானம்.
2.அந்தச் சக்தியைப் பெற்ற பின் அதை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுவது பக்தி.
3.நல்ல ஒழுக்கத்தை நாம் எண்ணுவதே பக்தி.

ஒரு சட்டியில் சாதமோ குழம்போ இருந்தால்தான் மற்றவர்களுக்கு எடுத்துப் போட முடியும். அது இல்லாதபடி “மகராசன் நன்றாக இருக்க வேண்டும்” என்று மற்றவர்களை நாம் சொன்னால் எப்படி இருக்கும்.

1.சட்டிக்குள் ஒன்றும் இல்லை. வெறும் சொல்லாகத் தான் வரும் (அகப்பையைத்தான் கொடுக்க முடியும்).
2.ஆகவே, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்ற  இந்த உணர்வின் வலுவை எடுத்துக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி “அந்த உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் (கொடுக்க) வேண்டும்”.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அங்கே தொழிலில் இணக்கம் பெறவேண்டும்.

அங்கே தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என்னைப் பார்ப்போர் குடும்பங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெறவேண்டும்.

இதுதான் “உண்மையான தெய்வ பக்தி” என்பது.

1.நாம் எண்ணும் எண்ணமே இறையாகி
2.அந்த உணர்வின் செயலே நமக்குள் செயலாகி
3.அந்தச் சொல்லாக வரும் பொழுது
4.நம் சொல்லே “தெய்வமாகின்றது”.
5.நமக்குள் அந்தத் தெய்வ உணர்வை இயக்குகின்றது.

6.கேட்போர் உணர்வுகள் அதைக் கேட்டறிந்தால் அது “தெய்வமாக இயக்கும்”.