போகமாமகரிஷி, அகத்தியமாமகரிஷி, கோலமாமகரிஷி இவர்களெல்லாம் பேரண்டத்தின் பேருண்மையினுடைய
நிலைகளைத் தான் உணர்ந்தறிந்தவர்கள்.
அவர்கள் காட்டிய சாஸ்திரங்களைப் பின்பற்றாது புற நிலைகளில் “வேள்விகள் செய்தால்… சரியாகும்” என்று அந்த
ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையினுடைய நிலைகளை மறைத்துவிட்டார்கள்.
பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் நாம் அனைவருமே மந்திரத்திலே சிக்குண்டு இருப்பவர்கள்.
நாம் எந்தெந்த மந்திரங்கள் உய்யப்படுகின்றோமோ அந்த மந்திரங்கள் நமக்குள் சென்ற
பின் நாம் அதிலிருந்து மீளமுடியாத நிலைகளில் இருக்கின்றோம்.
1.நமக்குள் அனைத்து ஆற்றல்களும் உண்டு என்று சொன்னாலும் அதை “நம்புவார்” யாரும் இல்லை.
2.இன்றைக்கு எல்லா ஆலயங்களுக்கும் சென்றுதான் திருப்தி பெறவேண்டும் என்ற நிலையில்
இருக்கின்றோம்.
3.நம் மனித உடலுக்குள் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலைகளைத்தான்
4.ஆலயத்தில் அனைத்து உருவங்களையும் காட்டி தெய்வ குணங்களாக அன்று மெய்ஞானிகள்
சொன்னார்கள் என்று
பலமுறை யாம் சொல்லியிருக்கின்றோம்.
ஆலயங்களுக்குச் செல்லும்போது அந்த ஆலயங்களில் பூஜிக்கும் முறைகளையும் யாம் சொல்லியிருக்கின்றோம்.
அதையாவது சரியாகச் செய்கின்றார்களா என்றால் இல்லை.
காசைக் கொடுத்தால் தான் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது. அங்கே
சென்று அர்ச்சனைக்குக் காசு கொடுத்துவிட்டு நாமும் எட்டிப் பார்க்கும் நிலைகளில்தான்
இருக்கின்றோம்.
அர்ச்சனை என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
புருவ மத்தியின் வழியாகச் சுவாசித்தல் வேண்டும்.
சுவாசித்த அந்த உணர்வுகள் நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் அது படுகிறது
உயிரிலே படும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நமக்குள் எண்ணங்கள் வலுப்பெற்று
நாம் எத்தகைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ
1.அந்த உணர்வின் சக்தியைச் சுவாசித்து
2.நம் உயிரான ஈசனிடம் படும்போது
3.நாம் கோயிலுக்குள் செய்வது போன்று
4.நம் உயிரான ஈசனுக்குள் அர்ச்சனை ஆகின்றது.
அத்தகைய மணத்தின் தன்மை கொண்டுதான் நம் உடலின் உணர்வலைகள் செயலாக்கி அந்த அலைவரிசையின்
நிலைகள்தான்
1.கண்களின் பார்வையும் காதின் நிலைகளும்
2.சொல்லும் செயலும் உடலின் அமைப்பும்
3.நாம் எடுத்துக்கொண்ட சத்து உடலாக அமையும்.
ஆகவே, நாம் எடுக்கும் ஆற்றல்மிக்க உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்தால் தான்
உயிரிலே உராயச் செய்தால் தான் உயிரிலே மோதச் செய்தால் தான் புருவ மத்தியில் இணைத்தால்
தான் அதை நமக்குள் சிருஷ்டியாக்க முடியும்.
இல்லை என்றால் நாம் நுகர்ந்தது நமக்குள் இயக்கமாகி அதை உயிர் சிருஷ்டித்துவிடும்.
இதைத்தான் ஆலயங்களில் சாதாரண படிக்காத பாமர மக்களும் புரியும் வண்ணம் “அர்ச்சனை” என்று காட்டினார்கள்.
புறத்தில் செய்வதைத்தான் பழகி இருக்கின்றோமே தவிர அகத்திற்குள் செய்ய வேண்டியதை
விட்டுவிட்டோம். நமக்குள் உள் நின்று இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரை மறந்துவிட்டு
அங்கே உள்ள சிலைக்கு அர்ச்சனை செய்வதால் எந்தப் பலனும் இல்லை.
இந்த விஞ்ஞான உலகத்தில் அனைத்தையும் ஒரு நொடிக்குள் அழித்துவிடும் இந்தத் தருணத்தில்
நாம் இந்தச் சாமி செய்யும் இந்த ஜோசியம் செய்யும் அந்த ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும்
இயந்திரம் செய்யும் என்று இருப்போமேயானால் “அறியாமையிலிருந்து நாம் விடுபடவில்லை” என்றுதான் அர்த்தம்.