இராமலிங்க அடிகள் சொன்னது “அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை
நீ”.
ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் இந்த உயிரின் துணை கொண்டு
அவன் தீமை செய்கிறான் என்று அறிந்து கொள்கின்றோம். அவன் செய்யும் தீமைகளை இந்த உயிரே
தான் அதைப் பிரித்துத் “தவறு செய்கின்றான்..,” என்று உணர்த்துகின்றது.
அதைத்தான் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ என்று
சொல்லிவிட்டு “தீமை செய்வோருடன்.., என்னுடைய பழக்கம் இல்லாது இருத்தல் வேண்டும்” என்று
அவர் வேண்டுகின்றார்.
எத்தகைய தீமைகள் இருந்தாலும்
1.அவர்களுடன் நான் அணுகாது
2.அவர்கள் பேச்சை நான் பேசாது
3.அவர்களுடைய நினைவுகள் இல்லாது நான் பெறவேண்டும்.
4.அந்தத் தெளிந்த மணங்கள் நான் பெறவேண்டும் என்பதுதான்
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ.
ஏனென்றால் தன் உணர்வின் தன்மை “பிறர் செய்யும் தீமைகளை…,
உற்றுப் பாராது… இருத்தல் வேண்டும்”. ஆகவே எனக்குள் தெளிந்திடும் அறிவாக நீ அருட்பெரும்
ஜோதியாக இருக்க வேண்டும்.
கார்த்திகேயா என்ற நிலையில் ஆறுபடை வீடுகளில் முருகனைப்
பற்றி அவர் தத்துவம் பாடி வந்தார். அதைத்தான் இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது
திரையிட்டு மனிதனின் உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிருடன் ஒன்றி ஜோதியின் உடலாக இருக்கும்
நிலைகள் என்று காட்டினார்.
அந்தப் பேரருள் பெறவேண்டும் என்ற தத்துவத்தைத்தான் சாதாரண
மக்களுக்கும் புரியும் வண்ணம் இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இராமலிங்க அடிகள்
கூறினார்.
1.நான் தீயதைக் கண்ணுற்றுப் பார்க்கக்கூடாது.
2.”தீயதே என் நினைவில் வரக்கூடாது…” என்ற நிலையை
அவருடைய பாடல்களில் காட்டியுள்ளார்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டாலும் ஏழு திரைகளிட்டு “மெய்ஞானிகளால்
அறிந்துணர்ந்த உணர்வுகள் நாம் பெறவேண்டும்”. இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வரும்
இருள்களிலிருந்து விடுபடுதல் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் பாடல்கள் அமைந்திருந்தது.
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ - நாம் எதையெல்லாம்
எண்ணுகின்றோமோ அதையெல்லாம் நமக்குள் தெளிவாக்குகின்றது.
ஒருவன் தவறு செய்கின்றான் என்று கேட்டறிந்தால் அவன் செய்யும்
தவறுகளை நுகர்ந்தறிந்து தவறு செய்கின்றான் என்று நம் உயிர் தான் உணர்த்துகின்றது. ஆனாலும்
1.அந்தத் தவறு செய்பவனைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணுவோம்
என்றால்
2.அவன் தவறு செய்த உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
3.அந்த அறிந்திடும் அறிவு செயலிழந்து
4.அவன் தவறு செய்யும் உணர்வே நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளை
இருள் சூழச் செய்துவிடுகின்றது.
அவன் தவறு செய்கின்றன் என்று உணர்த்துவதும் நம் உயிர் தான்.
அவன் தவறு செய்கின்றான் என்று நாம் பல முறை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள்
வந்து “உயிரால் உணர்த்தப்படும் இந்த அறிவும் மங்கிவிடுகின்றது”.
அதனால் தான் இராமலிங்க சுவாமிகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும்
கருணை நீ என்று இந்த உயிருடன் ஒன்றி
1.தான் எண்ண வேண்டியது எது?
2.எவ்வாறு எண்ண வேண்டும்?
3.எதனை நாம் செய்ய வேண்டும்? என்ற நிலைகளில்
4.மக்கள் நாம் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
அவருடைய பாடல்கள் மூலம் உணர்த்தினார்கள்.
அதே சமயத்தில் அக்காலத்தில் அவர் தெளிந்த நிலைகள் கொண்டாலும்
அவர் அறியாது அவருக்குள் பல “அற்புதம்” நடக்கின்றது.
சில நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் அவர் உடலில் ஆன்மாவில்
இருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு
தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.
ஆனால், அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும்
புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே
தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன? என்று
இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.
இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர்
ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு
4.ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.
ஆனால், அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப்
பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான்
அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும்
எடுப்பார் இல்லை”.
இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…,”
என்று அவர் விடுபட்டுச் சென்றார். நொந்து சென்றார்.