ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2017

“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது…! என்று நீங்கள் எண்ணினால் அதைத்தான் பெறமுடியும், தீமையை நீக்கும் அருள் சக்தி வேண்டும் என்று தான் கேட்க வேண்டும்

உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதையெல்லாம் உங்கள் உயிர் உருவாக்கும். ஆகவே தெளிவான நிலை பெற்று தெளிந்த மனம் பெறுங்கள்.

நிறையப் பேர் என்ன செய்கின்றார்கள் என்றால் சாமியிடம் போனால் நோய் போய்விடும். அவர் பார்வை பட்டாலே நன்றாகிவிடும் என்று சொல்லி இங்கே அனுப்பி விடுகின்றார்கள்.

அப்படி வருகின்றவர்கள் என் குடும்பத்திலே தொல்லையாக இருக்கின்றது, குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது, சாமி நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் வருகின்றார்கள்.

ஆனால், நான் சொன்ன முறைப்படி தியானத்தையோ ஆத்ம சுத்தியையோ எடுப்பதில்லை.

சொல்லி அனுப்புபவர்கள் சரியான நிலையில் அனுப்ப வேண்டும். அதாவது, சாமி சொன்ன முறைப்படி நான் இதைச் செய்தேன், எனக்கு நல்லதாக ஆனது என்று சொல்லி அனுப்பினால் நல்லது.

இதை விட்டுவிட்டு, சாமியிடம் போனால் எல்லாம் சரியாகப் போகும் என்று அனுப்பிவிடுகின்றார்கள்.

அப்புறம் வருகின்றவர்கள்
1.எனக்கு இந்தக் கஷ்டம், அந்தத் தொல்லை, எனக்கு இந்த நோய்,
2.நோய் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது,
3.தொல்லை என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது,
4.சாமி காப்பாற்றுங்கள் என்று வர ஆரம்பித்துவிடுகின்றார்கள்.

கஷ்டம் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்.., என்று கேட்பதை விடுத்து “கஷ்டத்தையும் நோயையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டால்”
1.எந்தச் சக்தியை இவர்களுக்குக் கொடுக்க முடியும்?
2.”விரும்புவதைத் தானே” கொடுக்க முடியும்.

தீமையை நீக்கும் அருள் சக்தி  வேண்டும், கஷ்டத்தை நீக்கும் அருள் சக்தி வேண்டும், நோயை நீக்கும் அருள் சக்தி வேண்டும் என்று எண்ணி என்னிடம் கேட்டு வந்தால் அதை நான் கொடுக்கலாம்.

ஆனால் என்னுடைய கஷ்டம் என்னை விட்டுப் “போகவே மாட்டேன் என்கிறது…!” என்று நீங்கள் கேட்டால் நான் எப்படி அதைக் கொடுக்க முடியும்?

இதை எதற்குச் சொல்கிறேன் என்று சொன்னால், நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது எப்படிச் சொல்ல வேண்டும்?

அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் உங்களுக்கு நல்லதாகும். “தீமையை நீக்கும் அருள் சக்தி எங்களுக்கு வேண்டும் என்ற ஆசீர்வாதம் மட்டும் சாமியிடம் வாங்கிக் கொண்டு வாருங்கள்.

அவர் சொல்லும் வழியில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு நல்லதாகும் என்று இப்படித்தான் சொல்லிப் பழகவேண்டும்.

அதைவிட்டுவிட்டு, “சாமியிடம் போங்கள்…, அவர் காப்பாற்றுவார் என்றால் அவரவர்கள் “ஆசையின்” நிலையில்தான் வருவார்கள்.

பின் எப்படி நல்லதாகும்? ஆகவே, தீமையை நீக்கும் சக்தி பெறுவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்தல் வேண்டும்.

எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் உங்களுக்கு விடுபடும் மார்க்கம் கிட்டும்.


துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.