ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2017

துன்பத்தை நீக்கிடும் அருள் சக்தியைப் பாய்ச்சி மகிழ்ச்சியான உணர்வை “சித்தர்கள் எப்படி நுகர்ந்தார்கள்” என்று காட்டினார் குருநாதர்

மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நிலைகள் எப்படியெல்லாம் ஏற்படுகிறது என்பதைக் காட்ட காட்டுக்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே பல துன்பங்களைக் கொடுத்து “என்ன வாழ்க்கை…?” என்று எம்மை வெறுப்படையும்படி செய்கிறார். அந்த வெறுப்படையும் உணர்வுகள் எமக்குள் என்ன செய்கிறது?

யாம் கண்ட சுகபோகங்களின் நிலைகள் என் குழந்தையின் மேல் பற்றுதலாக இருக்கப்படும் பொழுது…,
1.குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைந்து வந்து
2.இத்தனை தொல்லைகள் கொடுக்கிறாரே என்ற எண்ணத்தை எனக்குள் கொடுத்து
3.இந்த உடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துவிடவேண்டும் (தற்கொலை செய்யலாம்) என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
4.அவ்வளவு தொல்லைகள், உடல் நோய் மன நோய் குழந்தைகள் மேல் பற்று…, “அவர்கள் என்ன ஆவார்களோ…? என்ற எண்ணம் எனக்கு.

உன் குழந்தையின்பாலோ குடும்பத்தின்பாலோ பற்றான உணர்வுடன் தற்கொலை செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்தால் நீ எப்படிக் காக்கப் போகிறாய்..? என்று அப்பொழுதுதான் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இந்த எண்ணத்துடன் சென்றால் உன் குழந்தைகளின் உடலுக்குள் புகுந்து
1.பேயாகத்தான் ஆடமுடியும்.
2.இல்லையென்றால் நோயாகத்தான் செல்ல முடியும்.
3.அவர்களைக் காத்திடும் “எண்ணம்” உனக்குள் இருந்தாலும்
4.நீ அவர்களைக் “காத்திடும் நிலையில்” இல்லை.., வளர்ந்திடும் நிலையும் இல்லை.
5.நீ எதற்குச் செல்கின்றாய்..,? என்று கேள்விக்குறி போட்டு என்னைத் தனித்து நிற்கச் செய்கின்றார்,

அதே சமயத்தில் அகஸ்தியமாமகரிஷி “அகம்… என்ற நிலைகள் கொண்டு “அணுவை அறிந்தார்…” என்று காட்டுகிறார்.

இதைப் போல ஒவ்வொரு நிலையிலும் காட்டுக்குள் சித்தனாக தோன்றிய அனைவருமே அறிந்தோ அறியாமலோ தான் கண்டுணர்ன்ந்த தாவர இனச் சத்தின் தன்மை கொண்டு இருந்ததையும் காட்டுகிறார்.

ஒருவர் நோயினால் துன்புற்று இருக்கும்போது அந்தத் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்று தான் கண்டுணர்ந்த தாவர இனச் சத்தைக் கொண்டு அவர்கள் நோய் நீங்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

நோய் நீங்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அந்த உணர்வை நோயுற்றவர்களின் உடலில் விளையச் செய்து அவர்கள் படும் துன்பத்தை நேர்முகமாக எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை அறிந்துணர்ந்து பல தாவர இனச் சத்தைக் கொடுத்து அந்த நோயை நீக்குகின்றார்கள்.

நோய் நீங்கி மகிழ்ச்சி பெறும் எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது அதைச் “சித்தர்கள் எப்படி நுகர்கின்றார்கள்?” என்ற நிலையை அங்கே உணர்த்துகின்றார்.

அவ்வாறு பிறருடைய நோயை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் சுவாசித்த இந்த உணர்வுகள்
1.அவர்கள் உயிர் அதை எப்படி இயக்குகின்றது?
2.அந்த உணர்வின் அலைகள் எவ்வாறு அந்த உடலில் படர்கின்றன?
3.இயக்கிய உணர்வின் ஆற்றலும் ஒவ்வொரு உணர்வுகளிலும் எவ்வாறு படர்கின்றது?
4.மகிழ்ச்சி கொண்ட உணர்வின் அலையைக் கண்டு நுகர்ந்து
5.தன்னில் எப்படி அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர் என்று குருநாதர் காட்டினார்.

அந்த அகஸ்தியர் கண்ட நிலையைப் போல உனது வாழ்க்கையில் குறுக்கிடும் எத்தகைய நிலையிருந்தாலும் அந்த மெய்ஞானிகள் சென்ற வழியில் நீ ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்து அதை உனக்குள் வளர்க்க வேண்டும் என்றுணர்த்தினார் குருநாதர்.


துன்பங்களை நீக்கிடும் அருள் சக்தி கொண்டு மற்றவர்களையும் அந்தத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலைப் பெறச் செய் என்றார் குருநாதர்.