ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2017

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா – நாம் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும்பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக மறுகின்றது.

ஆக, நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது
1.உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது.
2.உணர்வை அணுவாக மாற்றுகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

காலையில் நம் உடலைத் தூய்மைப்படுத்தி நம் ஆடைகளைத் தூய்மைப்படுத்தியபின் விநாயகரை உற்றுப் பார்க்கும்பொழுது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வழியை அன்று இவ்வாறு முறைப்படுத்தினார்கள்.

ஆக அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி வலுப்பெறச் செய்து கொண்டே வந்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளைந்து அதனின் சத்தாக நம் உயிரான்மாவில் ஒளியின் அணுக்கள் பெருகும்.


இதுதான் நம் உயிராத்மாவிற்குச் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து. ஒளியின் சரீரமாகி நாம் அந்த அகஸ்தியமாமகரிஷி வாழும் துருவ நட்சத்திரத்தின்  ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்திட முடியும்.