ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2017

காசைக் கொடுத்து யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்லி தீயிலே பொருளைப் போட்டால் விதியை வென்றுவிட முடியுமா…?

விநாயகரை வைத்து அதை உற்று நோக்கி உணர்வினைப் பதியச் செய்து விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானியர்கள்.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஓங்கி எண்ணத்தைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று அதைத் தனக்குள் கவர்ந்து தீமையை அகற்றும்படி செய்து உணர்த்தினார் அகஸ்தியர்.

எதைக் கண்டுணர்ந்து அன்று அகஸ்தியன் விண்ணுலகம் சென்றானோ அதைத் தன் இன மக்களுக்கும் பெறவேண்டும் என்று அவ்வாறு செய்தான்.

அதை யாரும் இப்போது செய்யவில்லை.

அதைச் இப்பொழுது சொன்னோம் என்றால் “தேங்காய் பழம் உடைக்காமல்…, எப்படிச் செய்வது? அரச மரத்தைச் சுற்றாமல்…, எப்படி அந்தச் சாமியிடம் வரம் வாங்குவது? என்று கேட்பார்கள்.

எங்கள் மூதாதையர்கள் இறந்து விட்டால் இறந்த பிற்பாடு நாம் மோட்ச தீபம் போட்டு அங்கே அர்ச்சனை செய்யாவிட்டால் மோட்சத்திற்கு எப்படிப் போவார்கள்.

இப்படி இந்த ஐதீகத்திலும் சாங்கியத்திலும் தான் நாம் தொடர்ந்து கொண்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கையே சாங்கியம் சாஸ்திரங்களில் காட்டியபடிதான் போய்க் கொண்டிருக்கின்றது.

சாங்கிய சாஸ்திரம் என்பது வேறு. ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிகள் வேறு.

ஆக ஒவ்வொரு குணங்களுக்கும் விதி அமைத்து இதை முடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு மதி கொண்டு விதியை மாற்றும் மார்க்கங்களைக் காட்டினார்கள் மகரிஷிகள்.

நம் விநாயகர் தத்துவமே ஞானவான் என்று விநாயகரைச் சொல்வார்கள். அதாவது அந்த மதி கொண்டு மனிதன் வாழ்வில் வந்த இருளைப் போக்கிய நிலைகள் பெற்றவர்கள் மகரிஷிகள்.

ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்தால் கண்ணின் கருவிழி நம் உடலிலுள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற நிலைகள் பதிவாக்குகின்றது. அதன் கதியில் நமக்குள் விளையப்படும் போது அது விதியாக மாறுகின்றது.

ஓர் வித்தினை நாம் ஊன்றினால் அது மரமாக வளரும் போது அதன் “கதியிலே” வளருகின்றது. வித்தின் தன்மை பெறும்போது “விதியாக” மாறி விடுகின்றது. தன் இனச் செடியை அது “விருத்தியாக்கச்” செய்து விடுகின்றது.

இதைப்போன்று தான் மனிதன் நாம் தீமையான சொற்றொடர்களைக் கேட்டுணர்ந்தால்
1.ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.
2.பின் அந்தத் தீமைகளைப் பற்றிய நினைவுகள் கூடிக் கூடி
3.அதனின் கதியிலே மனிதன் வாழ்க்கை கூடிவிடுகின்றது.
4.ஆக, அந்தத் தீமையை விளைவிக்கும் அந்த உணர்வின் நிலையாக விளையப்படும் போது “விதியாக..” மாறி விடுகின்றது.
5.அந்த விதியிலிருந்து மீள முடியாது.., என்ற நிலை சாங்கிய சாஸ்திர விதிகளில் காட்டப்பட்டிருக்கின்றது.
6.விதி வழி நடக்கும் என்கிறார்கள், அதை மதி கொண்டு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சாங்கிய சாஸ்திரத்திலே இவர்கள் சொல்லும் “மதி…” என்பது என்ன?

1.சாஸ்திர விதிப்படி யாக வேள்வியினை நடத்தி
2.தீயிலே பல பொருள்களைப் போட்டுப் பொசுக்கி விட்டால்
3.பல மந்திரங்களைச் சொல்லி விட்டால்
4.மதி கொண்டு விதியை மாற்றுவதாக இவர்கள் சொல்கின்றார்கள்.

எந்த மதி கொண்டு… விதியை மாற்ற வேண்டும்….!

நீங்கள் காசைக் கொடுத்துவிட்டு அதிலே யாகத்தை வளர்த்து தீயிலே போட்டு பொருளைப் பொசுக்கிவிட்டால் “மதியாக” மாறிவிடுமா…?

நம் உயிர் நெருப்பு. அருள் மகரிஷிகளின் அருளாற்றலை உயிர் வழி சுவாசித்து உடலில் உள்ள இரத்தங்களிலும் அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களிலும் பாய்ச்சுதல் வேண்டும்.

பின் நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சுதல் வேண்டும்.

ஆக, ஊழ்வினையாகப் பதிவாகி அதனால் விளைந்த அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை வலுப் பெறச் செய்யும் பொழுது அந்த விதியின் கதி மாறி நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் மதியாகி “ஒளியின் சுடராக” மாறுகின்றது.

1.நம் உயிரான நிலைகள் கொண்டு
2.அருள் ஞான உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி
3.தீமையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்
என்பது தான் மகரிஷிகள் கண்டுணர்ந்த சாஸ்திரத்தின் உண்மைகள். உயிரான நெருப்புக்குள் அருள் உணர்வுகளைப் போடச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆனால், நாம் புறத்தில் உள்ள நெருப்பில் பொருள்களைப் போட்டுக் கொண்டுள்ளோம்.