உலகைக் காத்திடும் மெய்
ஞானிகளாக நீங்கள் உயர வேண்டும் – உங்கள் ஒவ்வொருவராலும் இது முடியும்
மகரிஷிகளின் அருள் உணர்வுடன் என்றுமே ஒன்றி வாழவேண்டும்
என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன். அதிகாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் எல்லோரும்
துருவ தியானத்தை எடுத்தாக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும்
பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படரவேண்டும்
என்று ஒரு பத்து நிமிடமாவது தியானியுங்கள்.
இதைப் போன்று கணவன் தன் மனைவியை எண்ணி மனைவிக்கு
இத்தகைய சக்திகள் கிடைக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே பெருகி மனைவியின் அருள் பார்வையில்
எனக்குள் அருள்ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாகப் பெறவேண்டும் என்று தியானிக்க
வேண்டும்.
கணவன் மனைவி நாங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
வாழ வேண்டும். எங்கள் இருவரின் பார்வையில் இருளை அகற்றும் சக்தி எங்களுக்குள் உருப்பெற
வேண்டும்.
எங்கள் பார்வையில் ஒவ்வொருவரும் அருள் ஞானம் பெறவேண்டும்.
அறிந்துணர்ந்து செயல்படும் திறன் அனவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.
ஏனென்றால்
1.ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்ற நிலையில் மதித்துவிட்டால்
2.நமக்கு வெறுப்பு என்ற நிலைகள் வராது.
3.உயிரை ஈசனாக மதித்து மனிதர் ஒருவரால் தான் இவ்வாறு
எண்ண முடியும்.
4.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலை சிவனாக மதித்தல்
வேண்டும்.
அந்தச் சிவனுக்குள் (உடலுக்குள்) நம்முடைய பேச்சும்
மூச்சும் நாம் சொல்லும் தன்மை பாதிக்காதபடி அருள் ஞானத்தின் தன்மை அங்கே வளரும்படி
நாம் செய்ய வேண்டும்.
நாம் எண்ணும் போது நம் உடலும் சிவமாகின்றது. நாம்
எண்ணியதை உயிர் ஈசனாக உருவாக்குகின்றது. அருள் ஞானத்தை நமக்குள் வினையாக்கும்போது நமக்குள்
ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கின்றது.
நாம் எவரிடமிருந்தும் பிரிந்து வாழவில்லை.
ஒருவர் கோபமாகப் பேசினாலோ நமக்குச் சம்பந்தமில்லாமல்
அடுத்தவரைத் திட்டும்போது அதை கேட்டறிந்தாலோ நமக்குள் பதிவாகிவிட்டால் அவரிடமிருந்து
வெளிப்பட்ட உணர்வுகள் அணுவாக விளைந்து விட்டால் அந்த உணர்வின் குணம் தன் இனத்தின் தன்மையைப்
பெருக்கும்.
அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக்
கணக்கப்பிள்ளை என்று சொல்வார்கள்.
1.நாம் எதை எதைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ
2.அதில் எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ
3.அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் நோயாவதும்
4.அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலை விட்டுச்
சென்றபின் அடுத்த உடல் பேயாகவோ அல்லது மனிதனல்லாத உடலாகவோ மாற்றிவிடும்.
மனித உடலுக்குள் சென்றால் பேயாகும். மனித உடலை விட்டு
வெளியே சென்றால் எந்த விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அதற்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கும்
நம் உயிர்.
இதைச் சிவ தத்துவத்தில் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக்
கூறுகின்றது. ஆகவே, இதையெல்லாம் நாம் மனதில் வைத்துக் காலையில் எப்படியும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.
அகஸ்தியமாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் சப்தரிஷி
மண்டலங்களையும் எண்ணி இதையெல்லாம் கூட்டி உங்களுக்குள் பெறவேண்டும் என்று வளர்த்துக்
கொள்ளுங்கள்.
1.உங்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
2.மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று
எண்ணுங்கள்.
3.இரண்டு பேரும் சேர்ந்து தங்கள் தாய் தந்தையருக்குக்
கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்களை வளர்ப்பதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும்
நீங்கி அவர்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழவேண்டும் என்று
அன்னை தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.
அடுத்து எங்கள் அன்னை தந்தையை ஈன்ற எங்கள் குலதெய்வங்களான
முன்னோர்களான பாட்டன் பாட்டி இருந்தால் அவர்கள் சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
அவர்கள் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண
வேண்டும்.
அவர்களின் அருள் என்றென்றும் எங்களுக்கு உறுதுணையாக
இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால்
அடுத்த கணமே “என்னை விட்டுவிட்டுப் போகின்றீர்களே..,” என்று எண்ணிவிடாதீர்கள்.
1.துன்பங்களை அகற்றிவிட்டு
2.இனித் துன்பமில்லாத நிலைகள் கொண்டு பிறவியில்லா
நிலை என்ற ஏகாந்த வாழ்க்கை அவர்கள் வாழ வேண்டும் என்று
3.அவர்களை நாம் விண் செலுத்திப் பழக வேண்டும்.
இதைப் போன்று நம் வாழ்க்கையில் வழி நடத்தினோம் என்றால்
மனிதனுக்குப் பின் அடுத்த நிலை அழியா ஒளிச் சரீரம் கல்கி.
ஆனால், மனிதனுக்குப் பின் வேதனை என்றால் மீண்டும்
இந்த நரகலோகத்தில் பிறவிக்குத் தான் வர வேண்டும்.
இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்பதற்குத்தான்
உங்களுக்குத் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.
இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப்
படியுங்கள். உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
“பொழுதுபோக்காகவே” இதை வைத்துக் கொள்ளுங்கள்.
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள்.
எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள்
மகிழுங்கள்.
இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள்
வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தினைப்
பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.
இதை நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம்.
நம்முடைய வாழ்நாள் அங்கே தான். செல்வம் நம்முடன்
வருவதில்லை. நம் உடலே நம்முடன் வருவதில்லை என்றால் உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக்
கவர்ந்தோமோ அதன் வழி அங்கே அழைத்துச் செல்லும்.
நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற
உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து
நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல்
வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெறவேண்டும்.
விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல்
வேண்டும். நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.
மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது தீமைகளைப் போக்கும்
நிலைகளுக்கு நீங்கள் தயாராகுதல் வேண்டும்.
அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப்
பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழலாம்.
இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும்
சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை
வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட
வேண்டும். நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக உயர வேண்டும் என்பதே எமது தவம்.
நான் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் எல்லோரையும்
அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள்
அந்த நிலைக்கு வாருங்கள்.
இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து
விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும்.
உங்களால் முடியும், நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்.