ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2017

ஏழாவது நிலையாக “உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நாம்” என்பதை அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா…!

மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி சரீரங்களை எடுத்து இந்த மனித உடலை உருவாக்கிய பின் இந்த ஆறாவது அறிவைச் செயலற்றதாக மாற்றும் பொழுது நாம் என்ன ஆவோம்?

ஏனென்றால் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்றும் முழு முதல் கடவுள் என்றும் பிரம்மாவைச் சிறைப் பிடித்தவன் என்றும் காரணப் பெயர்களைச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

அப்படிக் காட்டியிருந்தாலும் அதை நாம் யாரும் சிந்திப்பதில்லை.

1.நாம் உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள்
2.இந்த ஆறாவது அறிவு என்பதைத்தான்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று காரணப் பெயரைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

சேனாதிபதி என்றால் இந்தப் பல கோடிச் சரீரங்கள் எடுத்து மனிதனாக உருவக்கிய பின் இந்த உடலைப் பாதுகாக்கும் நிலை பெற்றது “ஆறாவது அறிவு” என்றும் தெளிவாக்குகின்றார்கள்.

இந்த ஆறாவது அறிவால் தன் இயக்கும் உணர்வின் சக்தியை வள்ளி (வல்லி) என்றும் “வலிமை மிக்கவள்என்றும் காரணத்தைக் காட்டுகின்றார்கள்.

திணைக் காட்டில் காவலிருக்கின்றாள் வல்லி என்று பெண் பாலாகக் காட்டுகின்றார்கள்.

நாம் பல கோடிச் சரீரங்களைக் கொன்று புசித்தவர்கள்… வேட்டையாடி வளர்ந்தவர்கள் தான் என்று காட்டுகின்றனர்.

1.ஒன்றை ஒன்று வேட்டையாடும் பொழுது
2.அந்த வேட்டையின் தன்மைகளில் தப்பித்து
3.இவை அனைத்தும் உணர்வின் தன்மை விளைந்து
4.தன்னைப் பாதுகாக்கும் உணர்வாக மனித உடலை உருவாக்கியது
என்ற நிலையை “வேடுவனின் மகள் வல்லிஎன்று காட்டுகின்றனர்.

நாம் பல கோடிச் சரீரங்களை வேட்டையாடி அந்த உணர்வில் விளைந்த சக்தி தான் “வல்லி” என்ற காவியங்களைப் படைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்

ஆகவே, வல்லி திணைக் காட்டில் காவலிருக்கிறாள். நாம் பல கோடி நிலைகளில் எடுத்த இந்தத் திணைக் காடாக இது நம்மைப் பாதுகாக்கின்றது “ஆறாவது அறிவு”.

இதை… “எதைக் கொண்டு” நாம் நுகர்ந்து நமக்குள் இயக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக்கப்படுகின்றது. 

1.தன்னைப் பாதுகாக்கும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.விண்ணின் ஆற்றலை நுகர்ந்து
3.உயிருடன் ஒன்றிய நிலையில் ஒளியின் சரீரம் பெற்றவர்கள் தான்
4.துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள், வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நம் எல்லை அது தான்.


ஆகவே, நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையாக “ஏழாவது அறிவாக… ஒளியின் அறிவாக” நாம் உருவாக்க வேண்டும் என்று கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.