ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2025

தாயை மறந்தால்... எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!

தாயை மறந்தால்... எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!


நம்மை மனிதனாக உருவாக்கியது யார்…? அம்மா அப்பா தான்… அவர்கள் தான் கடவுள். ஒன்றும் அறியாத வயதிலிருந்து விவரம் தெரியும் வரை நம்மைக் காத்தது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமக்குத் தெய்வங்கள்.
 
பல தீமைகளிலிருந்து விடுபட்டு என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஞானத்தை ஊட்டி நம்மைக் காத்த தெய்வம் நம் தாய் தான்…” இது நல்லதப்பா இது கெட்டதப்பா உன் வாழ்க்கையில் இப்படி இருக்க வேண்டும்…! என்று சொன்ன குருவும் தாய் தந்தையர் தான்…”
 
தை எல்லாம் மறந்து விட்டு
1.ஆயிரம் சாமியார்களைத் தேடினாலும் சரி
2.ஆயிரம் கடவுளைத் தேடினாலும் சரி
3.நம்மை மனிதனாக உருவாக்கிய தெய்வமான தாயை மறந்து விட்டால்
4.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தை மறந்து விட்டால்
5.நமக்கு நல்ல வழிகளைக் காட்டிய குருவை மறந்து விட்டால்
6.எங்கு சென்றாலும் நல்லதை ஒன்றும் எடுக்க முடியாது.
 
இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
தாய் தந்தையர் சொத்தைச் சம்பாதித்த பின்பு இன்று அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள். அங்கே இருந்தாலும் கூட பென்ஷன் வாங்கச் சென்றால் உனக்கு எதற்கு வ்வளவு காசு…? இத்தனை ரூபாய் பத்தாதா…?” என்று அதையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் இன்றைய குழந்தைகள் இருக்கின்றது.
 
இது போல் இன்று நிறைய நாம் கேள்விப்படுகிறோம்.
 
உழைத்தேன் பிள்ளைகளை வளர்த்தேன் படிக்க வைத்தேன்…! என்று தாய் தந்தையர் இருந்தாலும்… குழந்தைகளோ…
1.நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்
2.உனக்கு எதற்குப் பணம்…? என் பிள்ளைகளுக்குத் தேவை…! என்று பிடுங்கிச் செல்கிறார்கள்.
3.இது மட்டுமல்ல தாய் தந்தையரை உதைப்பவர்களும் இருக்கிறார்கள்.
 
தகப்பன் சம்பாதித்து விட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்த பிற்பாடு மூன்று லட்சம் கையிலே பணம் வைத்திருக்கின்றார்கள்.
 
மூன்று இலட்சத்திற்கு உனக்கு என்ன வேலை…? உனக்கு மாதம் வேண்டிய பணத்தை நாங்கள் கொடுத்து விடுகின்றோம் அந்த மூன்று லட்சம் ரூபாய் எங்களிடம் கொடு கொடுக்க வேண்டியது தானே…! என்று கேட்கின்றார்கள்
1.ஆனால் பணத்தைக் கொடுத்த பின் அடுத்து சோறு போடுவார்களா…?
2.இது எல்லாம் இன்றைய காலத்தில் கொடுமையிலும் கொடுமை.
 
அரக்க உணர்வுகள் தாய் தந்தையரை மறக்கச் செய்து விட்டது.
 
யாம் சொன்ன முறைப்படி தாய் தந்தையரை மதித்துச் செயல்படுத்தினால் காட்டிற்குள் சென்றால் ஒரு புலியே தாக்க வருகிறது என்றாலும் அம்மா…” என்று உங்கள் தாயை அழைத்தால் போதும். அந்தப் புலி தாக்காது.
 
தெருவிலே நாய் விரட்டி வந்தாலும் அய்யய்யோ அய்யய்யோ…! முருகா…! என்று சொன்னாலும் கூட லபக் என்று பிடிக்கும். ஆனால் அம்மா…!” என்று அழைத்துப் பாருங்கள். அந்த நாய் உங்களைக் கடிக்கிறதா..? என்று பார்க்கலாம்கடிக்காது.
 
யானையே தாக்க வந்தாலும் சரி அந்தத் தாயின் பாச உணர்வு நம் உடலில் இருக்கின்றது. “அம்மா” என்று எண்ணிணால் அந்த அலைகள் குவிந்து நம்மைக் காக்கச் செய்யும்.
 
சந்தர்ப்பத்தில் தொழிலே பெரும் சங்கடங்கள் வருகிறது என்றால் சாமியார்களை நினைப்பதைக் காட்டிலும்
1.யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கி அம்மா…! என்று ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடக்கூடிய வலிமையும் எனக்கு அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயினுடைய உணர்வு உங்களுக்கு எப்படி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
 
ஞானிகள் நம் தாயைப் பேணிக் காக்கும் முறைகளைக் காட்டியுள்ளார்கள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தாய் தந்தையினுடைய அருளால் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.
 
ஆனால் இன்று இதையெல்லாம் மறந்து இருக்கின்றோம். தாய் தந்தையர் கோவிலுக்கு வா…” என்று கூப்பிட்டால் உனக்குப் பைத்தியம் நீ போ…” என்று சொல்லக்கூடிய காலமாக இருக்கின்றது.
 
அரக்க உணர்வுகளாக வளர்ந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் தன்மைகளும் துன்புறுத்தும் நிலைகளும் இன்று கண்களிலே நாம் பார்க்கும் படியாக நடந்து கொண்டிருக்கின்றது.
 
ஆனால் தாய் தன் குழந்தையைக் கர்ப்பத்தில் வளர்க்கப்படும் பொழுது எத்தனையோ இன்னல் படுகின்றது வேதனைப்படுகின்றது. பிறந்த பிற்பாடு அவனை ஆளாக்குவதற்கு எவ்வளவோ சிரமப்படுகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றது. அவனுடைய கல்விக்கும் எத்தனையோ சிரமப்பட்டுக் கடனை வாங்கியாவது அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றது.
 
ஆனால் கற்றபின் குழந்தையினுடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது எத்தனையோ தவறான செயல்களை அவர்கள் செயல் படுத்துகின்றார்கள். இது எல்லாம் ஞானிகள் காட்டிய வழிகளை இன்று தவற விட்டதால் ஏற்படுவது தான்… அதனால் நாம் படக்கூடிய வேதனைகள் ஏராளம்.
 
ஆகையினால்
1.என் அம்மாவைப் பற்றி நான் எண்ணினாலே எனக்கு (ஞானகுரு) அழுகை வந்து விடும்.
2.காரணம் என் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான் இந்த ஞானத்தையே நான் பெற முடிந்தது….
3.உங்களுக்கு இதைப் போதிக்கவும் முடிகின்றது.
4.தாயின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டதனால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
 
என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஒரு பெண் பிள்ளை போன்று நான் தான் சமைத்துக் கொடுப்பேன் எல்லா உதவிகளும் செய்வேன்.
 
என் பாட்டிக்கும் (தாயின் மாமியார்) என் தாய்க்கும் சண்டை வரும். என் பாட்டி  கண்டபடி பேசும். அதனால் ஒரு சமயம் கோபித்துக் கொண்டு போய் என் தாய் கிணற்றில் விழுந்து விட்டது.
 
நானும் உடனே கிணற்றில் குதித்து என் தாயைத் தூக்கி வந்தேன். எனக்கு வயது அப்போது எட்டு இருக்கும் என் தாயும் நானும் அதிலிருந்து பிரிந்து இருப்பதே இல்லை…. ஏதாவது வேதனைப்பட்டால் மீண்டும் கிணற்றில் விழுந்து விடுமே என்று..!
 
ஏனென்றால் தாயினுடைய பாசத்தை என் தாய் எனக்கு உணர்த்தியது. அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
1.ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தாயை வணங்கினாலே போதுமானது.
2.கடவுளை எங்கேயும் தேட வேண்டியதில்லை… நம் தாய் தான் கடவுள்.
 
நம்மைத் தெய்வமாக இருந்து காப்பாற்றியது தாய் தான். குருவாக வழிகாட்டுவதும் தாய் தான். ஆகையினால் இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துச் செயல்படுங்கள்.
 
விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கையாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மெய் ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு தாயினுடைய பேரன்பைப் பெற முற்படுங்கள். அதை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
எந்த நிலை வந்தாலும் என் தாய் தந்தையின் அருளால் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்படுத்திப் பாருங்கள்.
1.எந்தச் சிக்கல் வந்தாலும் அதை நிவர்த்திக்கக் கூடிய நல்ல உபாயம் வேண்டும் என்று தாயை எண்ணுங்கள்.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வுகள் இயக்கி நமக்கு ஞானத்தை ஊட்டும் தப்பிக்கும் மார்க்கத்தையும் காட்டும்.
3.யாராவது இடைஞ்சல் செய்ய வந்தால் தாயின் உணர்வு வந்து நமக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நம்மைத் தாக்காது தடுக்கவும் செய்யும்.
4.எத்தகைய தாக்கக் கூடிய நிலைகள் வந்தாலும் தாயை எண்ணினால் அதை மறைக்கக் கூடிய சக்தி உண்டு.
 
ஆக அதைப்போன்று தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். கோவிலுக்குச் சென்றாலும் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனையைத் தான் வளர்த்து விடுகின்றோம்.
 
இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் மாறிஇனி வரக்கூடிய காலங்களில் இருந்து மீட்டுவதற்கு இந்த முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.