ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை
ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில்
உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டும்
என்று அவர்களை அறியாமலே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால் செயல்படுத்த முடியவில்லை நல்லுணர்வுகளை.
பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும்
இவ்வாத்மாக்களை நல்லுணர்வு படுத்திடப் பல உடல்களை ஏற்றும் பல எண்ணங்களில்
பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.
ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து
செயலாக்குவதில்லை…?
1.சப்தரிஷியாய்… சகலத்துடன்
கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை.
2.பிறப்பில் வரும்பொழுதே இவ் ஆண் பெண் என்ற
இச்சையில், ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி
தடைபடுகிறது.
3.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும்பொழுது
முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இவ் இச்சை நிலையினால் தான்.
பிறப்பிற்கு வந்துவிட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய
நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும்
1.இப்பிறப்பு என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற
பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது.
2.அதனால் தான் எம் மகான்களும் பிறப்பில்
வந்து பிறப்பதில்லை.
ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.
பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல்
கொண்டார்.
அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை
வெளிப்படுத்தினார், பைத்திய கோலம் பூண்டு. பல அன்பர்களின்
இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச்
செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.
அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக
மக்களின் பேராசையான தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின்
மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு
அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.
1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள
பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினவே அன்றே
2.அழியாப் பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும்
அங்கு விரும்பவில்லை.
பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக்
குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்.
1.எம்மிடம் உள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயன் என்ன…?
3.பயன் என்பதையே அழுகிப்
போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!
அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் பிடித்தேன்.
முன் ஜென்மத்தில், அவனது
முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.
அஜ்ஜென்ம ஆசையில் இருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட
ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல
இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய
இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின்
வழித்தொடர் அறிய வைத்தேன்.
4.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான்…
அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்.
பல ஆசை நிலைகளையும் ஊட்டிவிட்டேன். இவ்வாத்மாவையே
முடித்துக் கொள்ளலாம் என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.
பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை
ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து… அவ்
வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை
வெளிப்படுத்திப் பல ஆத்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும்
நிலையை எல்லாம் செயலாக்கினேன்.
அந்நிலையில்தான் எமக்குச்
சிஷ்யனாக்கி “அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம்” என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப்
பிரிந்தேன்.
அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலில்
இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை
உணர்த்தி வருகின்றேன்.
1.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம்
இவ்வாத்மாக்கள் எங்கெங்கு உள்ளனவோ
2.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித
ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செய்திகளைச் செய்விக்கின்றோம்.
வேணுகோபாலனைக் கருவியாக்கித்தான் ஞானத்தின் வழித்தொடரைச்
செயலாக்கும் ஆத்மாவாய் உணர்ந்தே அவரால் இவ்வுலகிற்குச் செயல்படுத்துகின்றேன்.
பல ஆத்மாக்களை இவ்வுலகில் உள்ள பொழுது அவரை ஏன்
செயல்படுத்தினீர்…? என்ற வினாவும் எழலாம்.
அவரது எண்ணமே எம் எண்ணத்தின் தொடர்பு கொண்டதாயும் அவர்
செயலாற்றும் வழியும் சத்திய நெறியும்தான் அவ்வாத்மாவை யான் ஏற்று அவ்வாத்மாவின்
சக்தியினால் இவ்வுலகத்தை சக்தி நெறியில் ஈர்க்கச் செயல் கொள்கின்றேன்.
அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான். எம் செயலை
வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
1.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின்
சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாய் ஏற்க முடிந்தது
2.அவ்வாத்மா வேறல்ல யான் வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டே “எம் செயல் நிலை இனி
இவ்வுலகினில் நடந்திடும்…”