ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2024

எல்லாம் அவனே…!

எல்லாம் அவனே…!


சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலை தான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.
 
ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையில் இருந்தே அவ் ஆத்மாவுக்குகந்த எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் அம்மனிதனின் உடல் உறுப்புகளும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன.
1.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
2.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.
 
மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ்ஆணிவேரின் நிலைக்குப் படர விட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.
 
மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.
 
நாம் உண்ணும் உணவில் இருந்து அவ்வுணவே அமிலமாகி, அவ்வமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.
 
நம் மனித ஆத்மாவை நம் செயலுக்குகந்த நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள நமக்கு என்று நம் சக்தியை எவ்வெண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத்தொடர் பெற்றிட நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி எந்நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.
 
நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில் நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதி விடலாகாது.
 
ஞானத்தின் வழித்தொடர் பெற்ற பின்
1.சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொண்டிடலாகாது.
2.”பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சம் நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.
 
ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு
1.இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே
2.நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே…! என்னும் உணர்வு பெற வேண்டும்.
 
இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமல் நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற நான்என்ற நினைப்பும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.
 
அனைத்து ஆத்மாவுடன் கலந்தே மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல் நம் ஆத்மாவிற்கு நற்சக்தியை சேமித்திடல் வேண்டுமப்பா.
1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே.
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல என்பதனை உணர்ந்து
7.அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தை நாம் பெற்று
8.நம் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தி ஆக்கிட நம் சக்தியை வளர விடல் வேண்டும்.