ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2024

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்


நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா...?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
 
புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா...?
 
அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.
 
1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.
 
நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் நான்என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.
 
1.நான்... எனது... என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது…
 
பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்... மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.
 
 இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் நான் என்ற நிலையில்தான்... அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது...!
 
பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்...? என்ற வினா எழும்பலாம்.
 
பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்... உண்மைதான்…!
 
ஆனால்... அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.
 
தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.
 
ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.
 
இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.
 
இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.
 
எல்லா மதத்திலும் இந்நிலை தான்.
 
உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
 
மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.
 
அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.
 
அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?
 
மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.
 
ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.
 
வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.
 
குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.
 
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.
 
ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.
 
இதை உணர்ந்து
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.