ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2020

மாதா பிதா குரு தெய்வம்

ஒரு விஷம் கொண்ட பாம்பு அது தன்னைப் பாதுகாக்க மற்றதைத் தீண்டும். பாம்பு மனிதனைத் தீண்டி விட்டாலோ அந்த மனிதனின் நினைவு பூராமே பாம்பின் பால் வந்துவிடும்.
 
ஆனால் பாம்பு தீண்டுவதற்கு முன் மனிதன் அதை அடித்துக் கொன்று விட்டால் பாம்பின் உயிர் அடித்தவர் உடலில் வந்துவிடும்.
 
இதைப் போல் நான் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியில் மற்ற எந்தெந்த உடலைப் பெற்றிருந்தேனோ
1.என் தாய் வழி அல்லது என் தந்தை வழி அடிக்கப்பட்டு
2.இந்த உயிர் அவர்கள் உடலில் சென்று சிக்கி
3.எனது உயிர் அவர்களுக்குள் ஈர்க்கப்பட்டு
4.அதன் வழி என்னை மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தார்கள் என் அன்னை தந்தை தான்.
 
ஆகவே மற்ற உடலிலிருந்த என்னை மனிதனாக உருவாக்கிய என் தாய் தந்தை தான் எனக்குக் கடவுள். என்னை மனிதனாக்கிய தாய் தந்தை தான் எனக்குக் கடவுள்.
 
மனிதனாக உருவாக்கினாலும் அதே சமயத்தில்
1.என் தாய் எப்பொழுதுமே எனக்கு நல் வழி காட்டி
2.நல் வழி நான் வாழ வேண்டும் என்று உபதேசித்த முதல் குருவும் அது தான்.
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பறிந்து என்னைத் தாலாட்டிச் சீராட்டி இன்று இத்தகைய ஞானத்தைப் பேசும் உணர்வுக்கு என்னை ஆளாக்கியது என் தாய் தான் அந்தத் தெய்வம்...!
 
இத்தகைய நிலைகளுக்கு என்னை ஆளாக்கிய என் தாய் தந்தையைக் கடவுளாக வணங்குகிறேன்.
 
1.என்னை மனிதனாக உருவாக்கிய கடவுளை
2.என்னை மனிதனாக்கித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த என் அன்னை தந்தையை
3.என்றுமே என் வாழ்வில் கடவுளாக வணங்குகிறேன்.
 
உங்கள் ஒவ்வொருவரையும் மனிதனாக உருவாக்கிய உங்கள் உயிர் கடவுள் என்றும் அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம் என்பதை எமது குரு எனக்கு உபதேசித்த அருள் வழிப்படி வணங்குகிறேன்.
 
1.என் அன்னை தந்தையைக் கடவுளாக வணங்கி...
2.என் அன்னை தந்தை பெற்ற அந்த உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக உருவாக்கிய என் உயிரையும் கடவுளாக மதித்து
3.இங்கே இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவரது உயிரையும் கடவுளாக மதித்து
4.அவன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் என்ற நிலைகள் மதித்து
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்ய வேண்டும்
6.உங்களை அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).
 
நீங்கள் செவி கொண்டு இதைக் கேட்டாலும் கண் கொண்டு பார்த்து மூக்கு வழி சுவாசித்து ஞானிகளின் உணர்வைக் கவரப்படும் பொழுது அது உங்கள் உயிரிலே பட்டு அந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாகி உங்கள் உடலில் இது ஐக்கியமாகின்றது.
 
உங்கள் கண்ணின் கருவிழி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ நான் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்கின்றது. உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது.
 
நான் பேசும் போது வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப்புலன்கள் கவர்ந்து வான்வீதியில் பரமாக இருக்கும் பரமாத்மாவாக மாற்றுகின்றது.
 
ஆகவே... உங்கள் கருவிழி என்னைப் பதிவாக்கிய பின் நான் வெளிவிடும் உணர்வை உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து உங்கள் உயிரின் காந்தப் புலன் கவர்கிறது... உயிரிலே மோதுகின்றது. மோதிய பின் உணர்ச்சிகளாக ஒலிகளாக எழும்புகிறது. உடல் முழுவதும் அதைப் பரவச் செய்கிறது.
 
அதை தான் நாம் அறிவதற்குத் தான் சப்தத்திற்குச் சங்கு என்றும் எந்த உணர்வுகளை நுகர்கின்றோமோ அதன் உணர்வுப்படி இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழல்வதைச் சக்கரம் என்றும் அதன் வழிப்படி தான் எண்ணம் சொல் செயல் கொண்டு நாம் செயல்படுகின்றோம் என்று ஞானிகள் காரணப் பெயர் வைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.
 
நம் உயிரை விஷ்ணு என்று காரணப் பெயர் வைக்கின்றனர். நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் உயிரை நாம் புரிந்து கொள்வதற்குத் தான் உருவக வழிப்படுத்தி அதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவினார்கள் மகரிஷிகள்.
 
1.இயக்கம் ஈசன் என்றும்
2.அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்
3.ஈர்க்கும் காந்தம் இலட்சுமி என்றும்
4.இந்த முறையில் மூன்று நிலைகளில் நம் உயிர் வேலை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.