ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2020

நாம் அடைய வேண்டிய மெய் உலகம்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி

1.தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்…

2.துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றி அனுப்பும் அதன் உணர்வுடன் நாமும் சேர்ந்து விட்டால்

3.துருவ நட்சத்திரத்தைப் போன்றே இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் கோணத்தில் எந்த அகண்ட அண்டத்திலிருந்து வருவதையும்

4.ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நாமும் பெற்று ஒளியின் உடலாகப் பிறவியில்லா நிலை அடைவோம்.

5.இது தான் மனிதனின் கடைசி நிலை… இந்தச் சூரியனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை…!

 

சூரியனால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் இந்த உயிர் இந்த உணர்வின் துணை கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாக பிற மண்டலங்களிலிருந்து வருவதை ஒளியின் உடலாக மாற்றிக் கொள்கின்றார்கள் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

 

அதாவது… இந்தப் பிரபஞ்சத்தில் அகண்ட அண்டத்தில் “சூரியனாக…” அது எப்படி உருவானதோ அதே போல் இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி இந்த உணர்வுகள் முழுவதையும் ஒளியாக மாற்றி தனித்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது.

 

இதை எல்லாம் குருநாதர் இந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? கடவுள் யார்..? என்று தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

 

1.ஓர் சாந்தமான உணர்வுக்குள் ஒரு வலிமையான உணர்வு இணைந்தால்

2.அது உள் நின்று அந்தச் சாந்தத்தை மாற்றித் தன் வழிக்கே அது அழைத்துச் செல்கிறது.

 

இதைப் போலத் தான்

1.நாம் அந்த ஒளியின் உடல் பெற்ற உணர்வினை நமக்குள் எடுத்தால்

2.உள் நின்று இருளை நீக்கி ஒளி என்ற உணர்வினை மாற்றுகின்றது.

 

பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல் உணர்வினை உடலாக ஆக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயனாக வருகின்றது.

 

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

 

தீமையை நீக்கிய உணர்வு பெற்ற அகஸ்தியன் உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் அதை எடுத்து விளையச் செய்தால் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்று

1.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடையும் அந்தப் பேரானந்த நிலை பெற்று

2.என்றுமே ஒளி உடலாகப் பெறும் அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

3.இதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையும் மார்க்கம்.

 

அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வலிமை ஆக்கிக் கொண்டால் தீமைகளை எளிமையாக்கி இந்த வாழ்க்கையில் புனிதம் என்ற நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைய முடியும்.

 

இராமேஸ்வரத்தில் காட்டியபடி…

1.குறுகிய காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில்… “நேரமாகி விட்டது மனதைக் குவியுங்கள்…!” என்று

2.இராமன் மனதைக் குவித்துச் சிவலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று செய்ததை

3.அந்த மனதைக் குவிக்க வேண்டியதை இங்கே மணலைக் குவித்தான் எறு காட்டி விட்டனர்.

 

இதைத் தான் ஆலயங்களில் காட்டி நாங்கள் பார்க்கும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நம் மனைதைக் குவித்து ஒன்றாக்கும்படி காட்டினர் ஞானிகள்.

 

ஆக.. பகைமையற்ற நிலையை உருவாக்கி மனிதர்கள் ஏகாந்தமாக விண் செல்ல வேண்டும் என்பதே ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள்.