ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2020

“சிவனுக்கு முந்தியவனாக...” விநாயகன் எப்படி ஆகின்றான்...

“உயிர் தான் ஈசன் என்றும்... கடவுள் என்றும்... உள் நின்று அவன் தான் இயக்குகிறான்...! என்றால் நம்புகின்றோமா...? என்றால் அது எப்படிக் கடவுள் என்று கேட்கிறோம்...!
 
இப்பொழுது நான் (ஞானகுரு) இங்கே பேசுகின்றேன். இந்த உணர்வுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது… வினையாக மாறுகின்றது.
1.இதை நீங்கள் நுகர்ந்து அறிந்தால் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.இந்த உணர்வுகளை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாறுகிறது உயிர்.
 
சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… சிவனின் பிள்ளை விநாயகன்...!
 
நான் சொல்லாகச் சொல்லும் உணர்வுகள் (வினை) இது முந்தியது… விநாயகன். உயர்ந்த உணர்வின் சக்தியை இப்பொழுது சொல்கிறேன். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டு நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாகி உடலானால் இது சிவமாகின்றது.
 
ஆகவே சிவனின் பிள்ளை விநாயகன். இவ்வளவு தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
 
1.நான் சொல்லும் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது அது சிவனுக்கு முந்தியது (அந்த வினை – விநாயகன்)
2.இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவானால் அது சிவனின் பிள்ளை விநாயகன்…!
3.உடல் சிவமாகிறது… இந்த உணர்ச்சிகள் வினை இயக்குகிறது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.
 
இப்படிப் பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றோம் கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! கணங்களுக்கு அதிபதி கணப்தி…! என்று உயிரை வணங்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.
 
நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வினை உடலாக மாற்றி நமக்குள் தெளிவாகிறது.
 
ஆகையினால் தான் இதைத் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அங்குசபாசவா…!
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதனை அடக்கும் வல்லமை பெற்றது என்று
2.விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்துள்ளார்கள்.
 
விஷத் தன்மை கொண்ட ஒரு கொசு என்ன செய்கிறது…?
 
மனிதனாக உருவாவதற்கு முன் விஷத் தன்மை அதிகம். யானையின் உடல் மேல் உள்ல தோல் மிகவும் வலுவானது..
 
ஆனால் இந்தக் கொசு அந்த யானைத் தோல் மீது அமர்ந்து தன் உடலில் உள்ள விஷத்தை அங்கே பாய்ச்சி அந்தத் தோலை அப்படியே விரியச் செய்து அதனின் இரத்தத்தைக் குடிக்கிறது.
 
யானை உடல் வலுப் பெற்றது. இருந்தாலும் தன் எண்ணத்தின் வலு கொண்டு அதிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டு எண்ணத்தின் வலுப் பெறுகின்றது.
 
மண்ணை வாரித் தன் மீது வீசிக் கொள்கிறது.. வாலால் அடிக்கிறது… கொசுவிடமிருந்து தப்ப…!
 
இப்படிப் பல கோடிச் சரீரங்களில்…
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்..” என்ற வலுவான உணர்வுகள் கொண்டு எண்ணி எடுத்து
2.மாற்றியமைத்த உடல் தான் இந்த மனித உடல் என்று காட்டுவதற்கு
3.சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்கு யானையின் தலையை மனித உடலில் போட்டு விநாயகா என்று காட்டுகின்றார்கள்.
 
விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் உணர்வினை நுகர்ந்தால் மூஷிகவாகனா (மூச்சு).
 
அந்த உணர்வு ஆன பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டி அவருக்குத் தக்க உதவிகளைச் செய்யச் செய்கின்றது.
 
நுகர்ந்தறிந்த உணர்வுகள் கொண்டு அவருக்கு நாம் உதவி செய்தாலும் அவரின் வேதனை உணர்வுகள் நம் நல்ல குணங்களை வங்கிட்டு விடுகிறது. அதனால் தான் அங்கே எலியைப் போட்டு வைத்துள்ளார்கள்.
 
ஒரு குளவி கொட்டினால் புழுவின் உடலின் அணுக்களுக்குள் அந்த விஷம் எப்படிச் சேர்கிறதோ அதைப் போல்
1.இந்த வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி விடுகிறது
2.அது வங்கிட்டுக் கொள்ளும்.. அதற்குள் குடியிருந்து கொள்ளும்
3.இதைக் காட்டுவதற்குத் தான் எலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் வளர்த்துக் கொண்ட நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்பதற்கே ஞானிகள் அருவத்தின் செயலை ரூபமாகக் காட்டி இப்படித் தெளிவாக்கியுள்ளார்கள்.