ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2020

ஆண்டவனின் ஆசியை எப்படிப் பெறுவது...? - ஈஸ்வரபட்டர்

அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்...!
 
நம்மையே நாம் உணராத நிலையில்... பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
 
அதே போல் ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். ஆனால் அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?
 
நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளே அந்தச் சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.
 
நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.
 
நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.