ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2020

பாட்டன் பாட்டிகளை மதிக்க வேண்டியதன் அவசியமும்... அவர்களை விண் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவமும்...!

நம் தாய் தந்தையரை வளர்த்தவர் யார்..? அவர்களுடைய தாய் தந்தையர். அவர்கள் குலவழியில் தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

நம் குலதெய்வங்களாக... நம்மை உருவாக்கிக் கொடுத்தவர்களும் நம்மைக் காத்தவர்களும் நம் பாட்டன் பாட்டி தான்...!
1.அவர்கள் தன் பேரக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்வதைப் பார்த்தால் “கீழே விழுந்துவிடாதே...” என்று பதறுவார்கள்.
2.மண்ணில் விளையாண்டு கொண்டிருந்தாலோ.. விளையாடதடா...! என்று
3.தாங்கள் கண்ட அனுபவங்களை எல்லாம் சேர்த்து நல் உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.
 
தாய் தந்தைக்குக்கூட அவ்வளவு பாசம் இருக்காது. பாட்டன் பாட்டிக்குப் பார்த்தால் தன் பேரக் குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும்.
 
குழந்தைகளாகிய நாம் ஏதாவது சேஷ்டை செய்தால் “இப்படிச் செய்கின்றானே செய்தால் உடம்புக்கு என்னாவது...?” என்று இந்த மாதிரி உணர்வுகளை எடுத்து அதை வளர்த்துக் கொள்கின்றனர்.
 
நம்மை அறியாமலே பாட்டன் பாட்டிக்கும் நாம் தீமையைத் தான் செய்கின்றோம்.
 
இதைப் போன்ற நிலை இல்லாது.. இதற்கு முன் செய்யத் தவறி இருந்தாலும் இனியாவது
1.எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற எங்கள் குலதெய்வமான பாட்டன் பாட்டிகள்
2.அந்தச் சப்தரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்களுக்காகப் பட்ட அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
4.பேரருள் உணர்வுகள் எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற பாட்டன் பாட்டிக்குக் கிடைக்க வேண்டும் என்று
5.இப்படி உயர்ந்த சக்திகளை அவர்களுக்கு இணைத்து வாழ்தல் வேண்டும்.
6.இந்த உணர்வுகளை அவர்களுக்குச் செலுத்தினால் உடலை விட்டு அவர்கள் அகன்றாலும் விண் செல்ல ஏதுவாகிறது.
 
எப்படி...?
 
அவர்களின் உடல் தான் நாம். ஆக அந்த அருள் ஒளி பெற்ற உணர்வை நமக்குள் வலுவேற்றிக் கொண்ட பின் அந்தச் சூட்சம சரீரமாகும் பொழுது (உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா) நம் உணர்வின் தன்மை அதிலே பதிவாகின்றது.
 
ஆகவே அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்... எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பேரருள் பேரொளியுடன் ஒன்றி என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலை அடைய வேண்டும்.
1.இந்த உணர்வுடன் அவர்கள் உயிரான்மாக்கள் அனைத்தையும்
2.வானிலே சப்தரிஷி மண்டலத்தின் பால் உந்தித் தள்ள வேண்டும்.
 
சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலந்த பின் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிடுகிறது. வாழ்ந்த அந்த அறிவின் தெளிவை அங்கே நிலைக்கச் செய்கின்றது.
 
காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதய நேரத்தில் உடல் பெறும் உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடுகிறது. இங்கே பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.
 
விநாயகர் தத்துவத்தில் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.இந்த உணர்வு வலு பெற்ற பின் எதனை நமக்குள் எடுத்தோமோ
2.அதே உணர்வின் தன்மை நம்மையும் அங்கே (சப்தரிஷி மண்டலத்திற்கு) அழைத்துச் செல்கிறது.