ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2020

புண்ணியவான்கள் யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய மனிதர்கள் உயர்ந்த நிலை பெற்று இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்கும்படி வாழ்ந்த நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை... நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை... அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்...!
 
அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கின்றார்கள்.
 
அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.
 
அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள்…
1.தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை
2.உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.
 
இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?
 
நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.
 
ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.
 
ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்...
அன்புடன் வாழ்ந்திடுங்கள்... ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்!