ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2020

அவசரம்… வெறுப்பு… அதி ஆசை… கொண்டெல்லாம் தியானத்தின் மூலம் சக்தி கூட்ட முடியாது

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து... அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்... நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.
 
அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.
 
மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன...?
 
1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே... இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.
 
தியான நிலை என்றால் என்ன…?

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் அந்த ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.