ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2020

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது...!”
 
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை
1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.
 
நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.
 
அப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாக தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்
1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.
 
குருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.
 
1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது...?
2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது...?
3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது...? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது...?
4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது...?
5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது...?
6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்...? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.
 
1.நாம் தவறு செய்கின்றோமா...?
2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா...? என்று
3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 
ஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.
 
கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்று கண்களின் ஆற்றலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அது போல் யாம் உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கி கொண்டால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கணக்குகள் உங்களுக்குள் கூடும்.
 
அந்தக் கணக்கின் பிரகாரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவாகி அதன் வழி வாழச் செய்து தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்.
 
1.உங்கள் உயிர் கடவுள்
2.உங்கள் உடல் ஆலயம்
3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது
4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்...
5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.
 
அத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.
 
ஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.
1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து
2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்
3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
 
நீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.
 
எத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்... பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்... என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.
 
அதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.
 
இந்த உடல் நமக்குச் சதமல்ல... ஆனால் உயிர் அழியாதது....! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை  
2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்... உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.