ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2020

கடும் விஷத்தையும் பேரொளியாக மாற்றும் திறன் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களைப் பெறச் செய்கின்றோம்

இந்த உபதேசத்தைப் பதிவாக்குவோர் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் அகஸ்தியனின் அருளாற்றலைப் பெற்றுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறலாம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை நமக்குள் பெருக்கி நம் உடலில் உள்ள அணுக்களை உயிருடன் ஒன்றாக்கப்படும் போது ஒளியின் உடலின் உணர்வாக மாறுகின்றது.
 
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் இதைச் சேர்க்க முடியும்.
 
1.இதிலே நாம் சற்று சலிப்படைந்தாலோ அல்லது சிறிது தடையானாலோ
2.இந்த மனிதனின் வாழ்க்கையில் விஷத் தன்மைகள் நம்மை ஆட்கொண்டுவிடும்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.
 
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் ஞானத்துடன் நீங்கள் வாழ்ந்து
2.இல்லற வாழ்க்கையிலும் சரி... தொழில் வழியிலும் சரி... மற்ற நிலைகளிலும் சரி...
3.தீமைகளை அகற்றும் வல்லுநராக நாம் ஆக வேண்டும்.
 
தீமையை அகற்றும் வல்லுநராக ஆக வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிக் கவர்ந்தே ஆக வேண்டும்.
2.உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பரப்பியே ஆக வேண்டும்.
 
இத்தகைய நிலைகளில் வாழ்க்கையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் இந்த உயிர் மனித உடலை உருவாக்கிய நிலை கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை பெறலாம் அது தான் “விஜய தசமி...”
 
நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பத்தாம் நிலை என்ற நிலை அடைந்து... “ஏகாதசி...” என்றுமே அழியாத தன்மையாக அந்த ஒளியான நிலைகளை நாம் முழுமை அடையும் தன்மை பெறுகின்றோம்.
 
எதை வைத்து...?
 
இந்த ஆறாவது அறிவை வைத்துத் தான்...! அதனால் சற்று சிந்தித்து இந்த மனித வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.
 
1.ஏனென்றால் சர்க்கஸில் விளையாடுவது போல்
2.“கரணம் தப்பினால் மரணம்...!” என்ற நிலையில் தான் இன்றைய மனித வாழ்க்கை நிலை உள்ளது.
 
நாம் எத்தகைய நல்ல மனிதராக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பேதங்கள் வரும் பொழுது நம் நல்ல சிந்தனை இழந்து தவறு செய்வோனாகவே மாறுகின்றோம்.
 
நல்ல பண்புள்ளவராக இருப்பினும் பிறர் செய்யும் தவறுகள் நமக்குள் வந்தால் நம் குணங்களும் மாறுபட்டு நாமும் தவறு உள்ளவர்களாக மாறுகின்றோம்.
 
தவறு செய்தே வாழும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல முடிகின்றது. இந்த உடலில் எத்தகைய உணர்வை நுகர்ந்தோமோ அதற்குத் தக்க தான் இந்த உடலை மாற்றுகின்றது உயிர்.
 
ஆகவே தினமும் காலை துருவ தியானத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை ஏங்கித் தியானித்து 
2.இந்த உடலில் பதிவாக்கி அதன் உணர்வைச் சுவாசமாக்கி எடுத்துக் கொண்டால்
3.தீமையை நீக்கிடும்... நஞ்சினை வென்றிடும்... நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியை நாம் பெறுகின்றோம்.  
4.வைரம் எப்படி விஷத்தின் தன்மை ஒளியாக மாறுகின்றதோ அதைப் போல் 
5.விஷத்தின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் கொண்டது தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

அந்தச் சக்தியைத் தான் உங்களைப் பெறும்படி செய்து கொண்டிருக்கின்றோம்...!