ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2020

திட்டியவன் உணர்வு நம்மை இயக்குவது போன்றே மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கச் செய்ய முடியும்

அடிக்கடி நான் (ஞானகுரு) உங்களுக்கு வற்புறுத்துவது எல்லாம் இது தான்...!
1.அழியாப் பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத் தான்
2.மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே உபதேசிக்கின்றோம்.
 
ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கஷ்டங்கள் வந்தால் அதை மாற்றும் தன்மைக்கு நாம் வரவேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வே அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
 
1.நாம் நுகரும் உணர்வு எதுவோ இந்த உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் வருகிறது.
2.நாம் பேரருள் பெறவேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அரங்கநாதங்களாகி
3.தீமைகள் அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்... ஆண்டாள்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.
 
இதை நீங்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் காலை துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 
என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தை கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். இந்தப் பதிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் நலமாக வேண்டும் என்று இதை எண்ணி எடுத்துக் கொண்டாலே போதும்.
 
1.இந்த உணர்வுகள் உங்கள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்களாகின்றது
2.ஏங்கிப் பெறும் போது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயக்குகிறது.
3.இந்த உணர்ச்சிகள் வரும் பொழுது உங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது குறையும்.
 
ஆனால் இதை விடுத்து விட்டு எனக்கு வேதனையாக இருக்கின்றது... என்னால் முடியவில்லை...! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.
 
நோயாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுச் சொன்னால் அதைக் கேட்டு அதற்கு மருந்து கொடுக்கும் நிலைக்கு இல்லை. “மருந்து கொடுத்து நோயை நீக்கும் வழியைச் சொல்ல வரவில்லை...”
 
மருந்துக்கு முன்னாடியே...
1.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல்
2.அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வைக் கிரகித்து இழுக்கும் வலிமை கிடைக்கின்றது.
4.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.
 
அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்கு இத்தனை உபாயங்களும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி வரம் கேட்பது போல் இல்லாது... “ஈஸ்வரா...” என்று உங்கள் உயிரை எண்ணி அருள் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும்.
 
ஏனென்றால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகிறது. அந்த உணர்வுகள் தான் உடல் முழுவதும் படர்கிறது. அது தான் உங்களை ஆட்சி புரிகிறது...! என்று பல முறை உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன். அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
 
ஏனென்றால் யாரோ செய்வார்... எவரோ செய்து கொடுப்பார்...! என்று தான் எண்ணுகின்றோம்.
 
உதாரணமாக ரோட்டில் நடந்து செல்கிறோம். ஒரு மாட்டைப் பார்க்கிறோம். அழகாக இருக்கிறது என்று இரசிக்கவும் செய்கின்றோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் அந்த மாடு திடீரென்று நம் பக்கம் வெகுண்டு திரும்பினால் உடனே “ஆ...” என்று அலறுகிறோம்.
 
அந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு அந்தப் பயம் என்ன செய்கிறது...? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கிறது. அந்தப் பயத்தால் நம் உடல் நடுக்கமாகி அது அடங்கச் சிறிது நேரம் ஆகிறது.
 
ஆகவே நம்மை அங்கே எது இயக்குகிறது...? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்டிப் படைக்கின்றது.
 
இதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்... இருளை அகற்றும் அந்தப் பேரருள் பெற வேண்டும்... என்று ஏங்கினால்
1.அந்த உணர்வு உங்களுக்குள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் உணர்ச்சிகளாக உங்களை இயக்கும்.
2.நல்ல சிந்தனையும் நற் செயலும் வரும்.
 
இதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் சாமி செய்து தருவார் என்று என்னைத் தான் நம்புகிறீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதில்லை.
 
உங்களால் அந்த அருளைப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலே அந்த ஞானிகளின் உணர்வுகள் பரவி உள்ளது. அதை எடுக்ககூடிய எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
 
திட்டியவனை எண்ணியவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா. திட்டியவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் சோர்வடைந்து உங்கள் காரியங்கள் தடையாகிறது அல்லவா.
 
அதற்கு முன்னாடி நம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒருவன் திட்டி அதனால் நாம் சோர்வடைந்த பின் குழந்தையை இரண்டு சாத்து சாத்துவோம்.
 
முதலில் குழந்தையை அனுசரிப்போம். சோர்வடைந்த நேரத்தில் குழந்தை ஒரு பேப்பரைக் கிழித்துப் போட்டால் போதும்...! போங்கடா உங்களுக்கு இது தான் வேலையா...? என்று இந்தக் கோபம் நிச்சயம் வரும்.
 
எந்தக் குழந்தை மேல் மிகுந்த பாசமாக செல்லமாக இருந்தோமோ அந்தக் குழந்தை மீதே இந்த வெறுப்பு வரும்.
 
அந்த நேரத்தில் கோபிப்பது யார்..? சற்று சிந்தித்துப் பாருங்கள்...! அந்தச் சோர்வான உணர்வு இயக்கப்படும் பொழுது தன் குழந்தை மீது இருக்கும் பாசத்தைக் கூட மறந்து குழந்தையைத் தாக்கும்படி செய்கிறது.
 
இதைப் போல் தான் ஒரு தீமை செய்யும் உணர்வை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் இயக்கம் வளர்ந்து நம்மை நல்ல வழிக்கே விடுவதில்லை
 
1.ஆனால் நல் வழி வளர்க்கும் அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நம்மை நல்வழி நடத்தும்.