ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2020

தியானத்தில் உயரிய சுவாசம் எடுப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.
 
நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று...
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.
 
அந்த நிலையில் இவ்வுலகம்... இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்... சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்...!”
 
நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.
 
1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
 
ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலகுக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.