ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2020

தீமை செய்யும் வினைகளை ஆன்மாவிலிருந்து அறுத்தெறிய வேண்டிய சரியான முறை

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.
 
அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.
 
இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்...? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.
 
ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.
 
அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.
 
கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகி விடும்.
 
அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.  
 
1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.
 
அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.
 
அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.
 
நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.
 
எந்த சந்தர்ப்பத்திலும் தீமை என்று நுகர்ந்தாலே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலிலே வலுவாக்கிக் கொண்டு நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும் பேரருளைப் பெருக்கும் உணர்வுகளைப் பெறவேண்டும்.
 
அப்பொழுது தான் அந்தத் தீய உணர்வின் வித்து வளராது. அதற்குண்டான சத்து இல்லை என்பதால்…!
 
இதை ஏன் சொல்கிறோம் என்றால் இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடக்கின்றது. உடனுக்குடன் நாம் பார்க்கின்றோம். அது எல்லாம் தீய வினைகளாக உருவாகிக் கடும் விளைவுகளாக நமக்கு வந்து கொண்டிருக்கின்றது. காற்று மண்டலத்தில் இத்தகைய தீய வித்துக்களே அதிகமாகப் பரவி உள்ளது. அதை நாம் வாழும் இடத்திலிருந்து அகற்ற வேண்டும்.
 
உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.
 
முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.
 
அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துகளை சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.
 
இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தே விடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.
 
இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து  இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றோம் (ஞானகுரு).