ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2020

ஈகோ (EGO) பிரச்சினையால் ஒவ்வொரு மனிதரும் எத்தனையோ துயரப்படுகிறார்கள்

நாம் நல்லதை எண்ணும் போது பிறிதொரு தீமை வந்தால் அந்த நேரத்தில் நமக்குள் (மனதில்) போர்கள் எப்படி வருகிறது…? தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கும் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் நமக்குள் எப்படிப் போர்கள் எப்படி நடக்கின்றது…?
 
கண்களால் பார்க்கும் உணர்வுகள் நாம் நுகர்ந்து உயிரிலே படப்படும் பொழுது இங்கே குருக்ஷேத்திரம்.
 
இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கும் போது…
1.நமக்குள் ஏற்கனவே இருக்கும் எண்ணத்திற்கு மாறான உணர்வை நுகரப்படும் போது
2.இங்கே போர் முறைகள் எப்படி வருகிறது…?
 
அந்தப் போர் முறை கொண்ட உணர்வுகள் அது இணைத்து அந்த உணர்வின் தன்மை உடலில் வரப்படும் போது நம் உடலில் நல்ல அணுக்களுக்கும் மற்றதுக்கும் போர் எப்படி வருகிறது...?
 
நம் உடலுக்குள் தீமைகள் எப்படி வருகிறது...? சிந்தனை எப்படி இழக்கப்படுகின்றது...? இதைப் போன்ற செயல்களை எப்படி மாற்ற வேண்டும்…? என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.
 
நாம் நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும்… பிறருடைய நிலை கௌரவர்கள்… “நான் எதை வளர்த்துக் கொண்டேனோ அதன் வழியே நான் வழி நடத்துவேன்…!”
 
நான் ஒருவனை நல்லவனாக எண்ணும் போது அந்த நல்லதின் தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதே சமயத்தில்…
1.நான் நல்லது என்று எண்ணிக் கொண்டு
2.பிறருடைய நிலைகள் என் வழிக்கு வர வேண்டும் என்று இதை எடுத்துக் கொண்டால் இது “ஈகோ…!”
 
அவன் சொல்வதை நான் என்ன கேட்பது...? அவன் சொல்வதை நான் ஏன் செய்ய வேண்டும்...? என்ற உணர்வு வந்தால்… இந்த ஈகோ வந்தால் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்..!
 
அவன் சொல்வதோ செய்வதோ நல்லதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது.
 
மனிதனாக வாழும் நிலையில் இந்தக் கௌரவப் பிரச்சினைகள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தான் இந்தக் கௌரவர்கள் என்ற நிலையில் கௌரவப் போர் நடத்தினார்கள் என்ற நிலையில் மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
 
இதை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
 
ஒவ்வொரு மகான்களும் அவர்கள் கண்ட பேருண்மையை மக்கள் எப்படிப் பெறவேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும்…? என்ற நிலையில் நமது நாடு மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தோன்றிய எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியுள்ளார்கள்.
 
ஆனாலும் இன்று மனிதனின் வேட்கை என்ன...?
 
நாட்டாசை வரப்படும் பொழுது தன் மதத்தைப் பெருக்கி விட்டால் தன் இணக்கத்திற்கு வந்து விடுவான் என்று செயல்படுகிறார்கள். அவன் தன் இணக்கத்திற்கு வரவில்லை என்றால் உடனே போர் முறை வருகிறது.
 
இப்படித்தான் அநாகரீகத் தன்மை தான் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
 
எப்படி வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் சென்றே தான் ஆகவேண்டும். எதன் உணர்வை இங்கே உடலில் வளர்த்தோமோ இந்த உயிர் வெளியே சென்ற பின் அசுர உணர்வு கொண்டு தாக்கி வாழும் மற்ற மிருக இனங்களாக நம்மை உயிர் உருமாற்றிவிடும்.
 
இந்தத் தருணத்திலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் சற்று யோசனை செய்து பாருங்கள். நாம் எத்தனை கோடிச் செல்வங்கள் வைத்திருப்பினும் அவைகள் நம்முடன் வருகின்றதா...?
 
அழகான உடலாக நாம் வைத்திருந்தாலும் அன்பு பரிவு கொண்டு பண்புடன் பிறரின் கஷ்டங்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அவனுடைய கஷ்டம் தான் நமக்குள் வந்து அவர்கள் பட்ட வேதனை தான் நமக்குள்ளும் வளர்கிறது.
1.நம் அழகான உடலும் குறைகிறது
2.தேடிய செல்வமும் அழிகிறது
3.கடைசியில் அதிக வேதனை என்ற உணர்வே வருகிறது.
 
எல்லோருக்கும் நன்மையைச் செய்தேன் எனக்கு இப்படி நிலை வந்தது என்று இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் என்ன நடக்கின்றது…?
 
இந்த வேதனை என்ற உணர்வை எடுத்தால் உடலுக்குப் பின் உயிர் நீ எதை வேதனைப்பட்டாயோ அதன் வழி கொண்டு
1.விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் அதிலே நீ சென்று அடங்கி 
2.அங்கே விஷத்தைப் பாய்ச்சி இரசித்து வாழும் உடலை (விஷ ஜெந்துக்களாக) அமைத்துக் கொடுக்கின்றது உயிர்.
 
அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.
 
இருக்கட்டும்… அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்ற உணர்வு கொண்டு நாம் இருந்தால் அதன் வழி பழி தீர்க்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
 
இதன் உணர்வை எடுத்துக் கொண்டால் பிறரை அழித்திடும் உணர்வு வருகின்றது. இந்த உணர்வுகள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நமக்குள்ளேயே கொல்கிறது.
 
கொன்று கொண்ட இந்த உணர்வின் தன்மை தான் இந்த உயிரிலே மிஞ்சுகிறது. இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் தருணம் அது தான் வருகிறது.
 
அப்படிபட்ட உணர்வுடன் வெளியே சென்ற பின் அடுத்து புலியின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே புலிக் குட்டியாக மாற்றி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் தன்மை வருகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.