ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2020

இன்றைய மனிதர்களின் (மாய) வாழ்க்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!

 
இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம்.
 
அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையிலே
1.நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா...?
 
நம் உடலா...? சம்பாரித்த பணமா...? சொத்தா...? சுகமா...?
 
நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே...! என்ற எண்ணம் பலருக்குண்டு.
 
ஆனால் நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு? பேரன்... கொள்ளுப் பேரன்....! என்று இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்? என்று சிந்திக்கின்றோமா...?
 
அம்மா...அப்பா... பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா... அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்...! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா...?
 
எல்லாம் போய் விட்டார்கள்... என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்...!”
 
அவர்கள் எதையுமே கொண்டு போகவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்...?
 
ஆக மொத்தம் பிறப்பு...உடல்...இறப்பு...! மீண்டும் பிறப்பு... உடல்...இறப்பு...! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.
 
இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும்
1.பிறவிப் பயன்... பிறவிப் பயன்... என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல்
2.இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
 
எண்ணக் கடலில் செல்லும் நாம்…
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே…
எண்ணிய எண்ணத்தில் தான்...ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே...!