ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2013

ஓம் ஈஸ்வரா குருதேவா என்றால் யார்? - ஞானகுருவின் விளக்கம்

நாம் “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்கின்றோம். பக்தி மார்க்கங்களில் சொல்லும் பொழுது, ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான், குருதேவர் எங்கேயோ இருக்கின்றார் என்ற எண்ணம் இல்லாதபடி, இந்தச் சொல்லின் நிலையை முதலிலே தெரிந்து கொள்வது நல்லது.

நமது சாஸ்திர விதிகளின்படி, ஓம் என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் ஓ.

“ஓ” என்றால் ஜீவன் என்று பெயர்.
நமக்குள் உயிர் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.
இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ,
அவையனைத்தும் “ம்” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

நாம் எண்ணியது எந்த குணமோ, அந்த குணத்தின் தன்மை நமது உடலானாலும், அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி, அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு, ஈஸ்வரா. இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது, குருதேவா. ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

நமது உடலில் எத்தனையோ வகையான குணங்கள் இருக்கின்றது. நாம் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நம் உடலில் எத்தனையோ எண்ணங்கள் இணைந்தாலும், எண்ணினாலும், இவையனைத்திற்கும் நமது உயிரே குரு. அதுதான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்பது.

உதாரணமாக ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். அது “ஓ” என்று இயங்கி, “ம்” என்று எனது உடலாக அமைகின்றது.
நாம் எதை எண்ணுகின்றோமோ,
அந்த உணர்வின் சத்து நமது உடலாக மாறுகின்றது.

அந்த குணத்தின் தன்மை உடலாக அமையப்படும் பொழுது, நாம் எண்ணிய குணத்தின் சக்தி உடலுக்குள் இயங்குகின்றது. இதுதான் ஓம் நமச்சிவாய. உடலுக்குள் இயங்கிய குணத்தின் சக்தி சொல்லாகவோ, செயலாகவோ வெளிப்படுவது சிவாய நம ஓம்.


நாம் யார்? கடவுள் யார்? ஆண்டவன் எங்கிருக்கின்றான்? 
நம்மை இயக்குவது எது? என்ற உண்மைகளை 
அந்த மெய்ஞானிகள் கண்ட நிலைகளைத்தான் யாம் சொல்லி வருகின்றோம்.