ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2013

விநாயகன் - நாம் எதை வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும்?

1. பிரணவத்திற்குரியவன் விநாயகன்
ஒரு உயிரணு எந்தத தாவர இனச் சத்தை நுகர்ந்ததோ, அதற்கொப்ப அந்த உயிருக்குள் தாவர இனச் சத்து “ஓ” என்று பிரணவமாகின்றது. “ம்” என்று பிரம்மம் சிருஷ்டியாகின்றது.

ஆக உடலாகும் பொழுது சிவன் இராத்திரி. இந்த உயிரின் நிலைகள் துடிப்பாகும் பொழுது, மின்மினிப் பூச்சி போல நம் உயிரின் துடிப்புகள் மின்னிக் கொண்டேயிருக்கும்.

ஆனால், அந்த மின்னலின் ஈர்ப்புக்குள் ஒரு செடியின் சத்தை, உதாரணமாக இந்த உயிரணுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் தன் அருகிலே இருக்கக்கூடிய கடலைச் செடியின் மணத்தை அது நுகர்ந்து, உயிருக்குள் பட்டவுடனே, அந்த மணத்தை ஜீவன் பெறச் செய்கின்றது. இதற்குப் பெயர்தான் ஓம் -- பிரணவம்.

கடலைச் செடியின் மணம் இந்த உயிருக்குள் ஈர்க்கப்படும் பொழுது, அந்த உயிர் எப்படித் துடிக்கின்றதோ, அதைப் போல் கடலைச் செடியின் மணம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது. இதுதான் “ஓ” அந்த உணர்வின் சத்து இந்த உயிருடன் இணையும் பொழுது இதற்குப் பெயர் சிவம்.

ஆக, கடலைச் செடியின் மணத்தை இந்த உயிர் சுவாசிக்கும் பொழுது, அது பிரணவம் - ஜீவனாகின்றது. அதனால்தான் பிரணவத்திற்கு உரியவன் விநாயகன் என்பது.
2. சிவனுக்கு முந்தியவன் விநாயகன்
சிவனுக்கு முந்தியவன் விநாயகன். உடலாவதற்கு முன், இந்தக் கடலைச் செடியின் சத்துதான் உயிருக்குள் பட்டு, அதனால் ஜீவனாகின்றது, ஒரு புழுவாக உருவாகின்றது.

ஆக, அந்த உணர்வின் சத்து இந்த உடலிலே வினையாகச் சேர்க்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக “விநாயகா” என்று உடலானபின், அந்தக் கடலைச் செடியின் மணம் இந்த புழுவின் உடலிலே எண்ணமாகின்றது.

ஆக, எண்ணத்தின் தன்மை கொண்டு நினைவு கூறும் பொழுது, இந்த உணர்வுகள் இயங்கி மூஷிகவாகனா. எந்தக் கடலைச் செடியை நுகர்ந்து உடலானதோ, அதைச் சுவாசித்து அந்தக் கடலைச் செடி இருக்கும் பக்கம் அந்த மணத்தை நுகர்ந்து
அந்தக் கடலைச் செடியின் மணமே
இந்தப் புழுவை வாகனமாக
கடலைச் செடி இருக்கும் பக்கம் அழைத்துச் சுமந்து செல்கின்றது.
இதுதான் மூஷிகவாகனா.
அதற்குத்தான் எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள்.

கடலைச் செடியின் சத்து உடலாகும் பொழுது சிவம். சிவத்திற்குள் விநாயகன். சிவனுக்கு முந்தியது இந்த மணம்.
ஆக, இந்த மணம்தான் சுவாசிக்கும் பொழுது பிரணவம்.
பிரணவத்திற்கு உரியவன் விநாயகன்.

எந்தக் கடலைச் செடியின் மணமோ, அது உடலாகும் பொழுது இதுதான் வினை. அந்த வினைக்கு நாயகனாக (புழுவாக) உடலாகின்றது. அந்த உடலான நாயகன் அந்த கடலைச் செடியின் மணத்தை நுகரும் பொழுது மூஷிகவாகனா, அதைச் சுமந்து செல்கின்றது.
3. விநாயகன் ஞானவான்
அது சுமந்து செல்லப்படும் பொழுதுதான் தன் அருகிலே இருக்கக்கூடிய மற்றொர் செடியை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது, தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்கின்றது.

இது நுகர்ந்து பார்த்த இந்த உணர்வுகள் ஜீவன் பெற்று, “ம்” என்று உடலுக்குள் கடலைச் செடியின் மணத்துடன் சேர்ந்து விடுகின்றது.
அடுத்தடுத்து மற்றதை நுகரும் பொழுது
அதை அறிந்தபின் இதற்கும் அதற்கும் சேரவில்லை.

இப்பொழுது எப்படி வேப்ப மரமோ, கடலைச் செடியோ தன் அருகிலே மற்ற செடியின் மணத்தை விடுவதில்லையோ, அதைப் போல இந்த உயிர் கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்ததினால், மற்ற செடியின் மணத்தை உணவாக உட்கொள்ள விடுவதில்லை.

இது நுகர்ந்து பார்த்து உயிருக்குள் பட்டவுடனே, அது ஞானம் -- அறிவு அதனால்தான் விநாயகன் “ஞானவான்”.

ஆக, கடலைச் செடியின் மணம் இந்த உயிருக்குள் பட்டு அது வினையாக சேரும் தருணத்தில் அதை அறிந்து கொள்ளும் மணம் ஞானம் வருகின்றது.

இது வேண்டாம் என்று ஒதுக்கி அது சுவாசித்த நிலைகள் கொண்டு, தன் உணவை எடுத்துக் கொள்ள அந்தக் கடலைச் செடி இருக்கும் பக்கம் அது நுகர்ந்தறிந்து நகர்ந்து செல்கின்றது.

இவ்வாறு நகர்ந்து செல்லும் பொழுது, அருகிலே செல்லும் மற்ற மணங்கள் சிறுகச் சிறுக நுகர்ந்து இந்த உணர்வின் சத்து அதற்குள் சேர்த்து
இந்தக் கடலைச் செடியின் மணத்தையே
நுகர முடியாது போய்விடுகின்றது.

கடலைச் செடி தன் அருகிலே இருந்தாலும், மணங்கள் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது கடலைச் செடியைப் பார்க்கும் பொழுது வெறுப்பாகின்றது.

அப்பொழுது, இதைப் போல உணர்வுகள் அதிகமாகச் சேரும் பொழுது, எலி எப்படி வளை அமைத்துக் கொள்கின்றதோ, இது நுகர்ந்து பார்த்த அனைத்தும் வளையிலிட்டு, கடலைச் செடியின் மணத்தை அறியாத தன்மை ஏற்படும் பொழுது,
இந்தக் கடலைச் செடி நாயகனாக இருந்த மணம் சிந்திக்க முடியாது,
தனக்குள் உணவு எது என்று தெரியாது கலக்கமாகி,
இதற்குள் நோயாக உருவாகின்றது.
4. நமது நாளைய சரீரம் எதுவாக இருக்கவேண்டும்?
நாம் குழம்பு வைக்கும் பொழுது பல பொருள்களைப் போட்டு வேகவைக்கின்றோம். முதலில் பலவிதமான மணங்கள் வெளிவரும். பின் அனைத்தும் சேர்ந்தவுடன், ஒரு சுவையின் தன்மை அதற்குள் பல ருசியின் தன்மை வரும்.

இதைப் போலத்தான் உணர்வின் எண்ணங்கள் பதிவாகி, அந்த உணர்வின் தன்மை உயிரான்மாவாக மாறுகின்றது. அந்த மாறிய நிலைகள்தான் இந்த உயிரிலே வினையாகச் சேர்த்து, வினைக்கு நாயகனாக இன்றைய செயல் நாளைய சரீரமாக” உருவாக்குகின்றது.

இப்படிப் பல மணங்களை நுகர்ந்து நுகர்ந்து பார்த்த
இந்த நிலைகள்தான் அது வினைகளாகி
வினைக்கு நாயகனாக அந்த மணங்களின் தன்மை இயக்கமாகி
நமது உயிர் அதைச் சரீரமாக மாற்றிக் கொள்கின்றது.


ஆகவே, நாம் இன்றைய செயலாக துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து, அந்த மணத்தை வினைக்கு நாயகனாக விநாயகனாக ஆக்கி, உயிரோடு ஒன்றி நாளைய சரீரமாகப் பெற்று, அகஸ்தியன் சென்ற எல்லையை நாமும் அடைவோம். எமது அருளாசிகள்.