ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2013

அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவம் - இனி, "இந்தப் பிள்ளை யார்?"

1. தீமையான உணர்வுகளை நாம் துடைப்பதில்லை
இன்றைய நிலையில் நாம் மற்றவர்கள் வேதனையாகச் சொன்னால், நமக்குள் கேட்டறிந்து அந்த வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். நாம் துடைத்துக் கொள்வதில்லை.

அடுத்தவர் துயரப்பட்டாலும், துயரைக் கேட்டறிந்தாலும் “ஓம் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் பாய்ச்சி, அதனை நிறுத்திவிட்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி துயரப்பட்டவர் பெறவேண்டும், அவரையறியாது சேர்ந்த இருள்கள் நீங்கவேண்டும் என்று நாம் எண்ணவேண்டும்.

பின், வாக்கினை அங்கே அளித்து
“மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறு,
நீ பெறுவாய்,
மகரிஷிகளின் அருள் சக்தியால் உன் நோய் நீங்கும்,
உன் வினைகள் நீங்கும், மெய்ப்பொருள் காண்பாய்”
என்ற இந்த உணர்வின் எண்ண அலைகளை நமக்குள் எடுத்து, அவர்கள் நலம் பெறவேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

ஆகவே, ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்குள் தீய வினைகள் வராது தடுக்கும் நிலைதான் விநாயக சதுர்த்தி. பிறர் பேசும் உணர்வுகள் நமக்குள் வினையாகச் சேர்த்து, அதன் நிலையாக தீமைகள் நமக்குள் விளையாது “நிறுத்துவதற்காகத்தான்” விநாயக சதுர்த்தி என்று வைத்தார்கள்.
2. நாம் அனைவரும் வெளிப்படுத்தும் உணர்வுகள், உலகில் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றது
நாம் அனைவரும் கூட்டமைப்பாகக் கூடி நின்று, வருடத்தில் ஒரு நாள் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுவதின் உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்வோம்.

நாம் இந்த வாழ்க்கையில் யார் யாருடன் எல்லாம் கலந்து பேசினோமோ, அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து சொல்லாக வெளிப்பட்டது அனைத்தையும், சூரியனின் காந்தப் புலனறிவு கலந்து வைத்துள்ளது.

அதே சமயத்தில், அந்த உணர்வின் சத்து நம் உடலில் ஊழ்வினையாகப் பதிவான நிலைகள் கொண்டு, வீட்டிலோ, தொழில் செய்யும் பொழுதோ, பிறர் மேல் பகைமை கொண்டு வெளிப்படும்போது, அது தரைகளிலும், சுவர்களிலும் பதிவாகிவிடுகின்றது.

அதை நாம் மீண்டும் எண்ணும் பொழுது, அந்த ஊழ்வினைகள் நமக்குள் விளைந்து,
நோயாக உடலை நலியச் செய்வதும்,
நமக்குள் பகைமையை ஊட்டுவதும்,
நம் நல்லதைச் சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்துவிடுகின்றது.
இந்த நிலையை நாம் நிறுத்த வேண்டும்.

காற்றுக்குள்ளும் விஷத்தன்மைகள் இருக்கின்றன. நமது உடலுக்குள்ளும் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுக்ள் இருவர் உடலிலும் இருக்கின்றது.

இருவருக்கும் அந்த நிலைகள் இருக்கின்றது. அது விளைந்த பின், இன்னொருவர் உடலில் இருப்பதை நுகர்கின்றது. அவர் வெறித்தன்மையாகப் பேசிய உணர்வுகள் எனக்குள்ளும் வருகின்றது.

இப்படிச் சாபமிட்ட உணர்வுகள் நமக்குள் விளைந்து வருவதைத் தடைப்படுத்த வேண்டும். நம் எண்ணத்தைத் தடைப்படுத்தும், நாம் அனைவரும் இட்ட மூச்சலைகள் காற்றிலே படர்ந்து இருக்கும் கொடூர சக்தியாக மறைந்திருக்கும் நிலைகளில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எதையெல்லாம் பேசி வெளியிட்டோமோ, நாம் எங்கு சென்றாலும் ஆத்மாவின் நிலைகள் பரமாத்மாவிலே கலந்தாலும் நாம் எண்ணிய நஞ்சின் தன்மை படர்ந்து சென்று, நமக்குள் இருக்கும் நல்ல வினைகளுக்குள் ஊடுருவதை, நமக்குள் வராது தடைப்படுத்தி விடுபடும் நந்நாளாகக் கொண்டாடுவதே விநாயக சதுர்த்தி.

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற நல்வினைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்ற நாம், பிறர் படும் துயரத்தைக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் நஞ்சாக மாறாமல், தீய உணர்வுகள் நமக்குள் வராது காத்திடும் நிலையே விநாயக சதுர்த்தி.
3. இனி இந்தப் பிள்ளை யார்?
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவம் இதுதான். தீமையை நிறுத்தி தூய்மை பெறும் நந்நாள்.

தூய்மை பெற்று, அகஸ்திய மாமமகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் செலுத்தி, நண்பர்களானாலும், சகோதரர்களானாலும், நம் குழந்தைகளானாலும், இதற்கு முன் நாம் பகைமைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வளராது, அந்த மெய்ஞானிகளின் நிலைகளை நாம் பெறவேண்டும் என்று இந்த நந்நாளில் காட்டப்பட்டது.

நமது குருநாதர் எமக்கு உபதேசித்ததை அருள்ஞான வித்தாக விளைய வைத்து, அந்த உணர்வின் சத்தைத்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம்.

இதை நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது, உங்களையறியாது வரும் தீமைகளை நீக்கும். மெய்ஞானியின் உணர்வுகள் விளைந்து, மெய் உணர்வின் தன்மையாக
இனி, "இந்தப் பிள்ளை யார்?"
இனி நான் அருள் ஞானிகளின் அருள் ஒளி பெற்று, உயிருடன் ஒன்றிய சரீரமாக நிலையாக இருப்பேன்.

ஒளியின் சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைவேன். அழியாச் சுடராக உருப்பெறுவேன், என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நந்நாள் தான் இந்த விநாயக சதுர்த்தி.