ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2013

நம்முடைய முந்தைய வினைகள் நம்மை எப்படி இயக்கும்...?

1. நம்முடைய முந்தைய பதிவுகள் நம்மை எப்படி இயக்கும்?
நஞ்சு என்பது சாகாக்கலை. ஆக, விஷம் கொண்ட உணர்வுகள் எதற்குள் பட்டாலும் அந்த விஷம் மட்டும் அழிவதில்லை. சாதாரணமாக, ஒரு மருந்திலே சிறிதளவு விஷத்தைக் கலக்கப்படும் பொழுது, கலந்த அந்த விஷமே நல்ல மருந்தை நோயுற்ற இடங்களுக்குள் ஊடுருவிச் செல்ல உதவுகின்றது.

அந்த நல்ல மருந்தைத் தாங்கிச் சென்ற விஷம், அந்த மருந்தின் துணை கொண்டு வீரியமுடன் செயல்படுத்தச் செய்து, நோயை உருவாக்கும் விஷத்தின் நிலைகளை அடக்குகின்றது. நோயைக் குறைக்கச் செய்கின்றது. ஆனால் நோயை அழித்தாலும்,
முதலில் எடுத்துக் கொண்ட
நோய் உருவாகக் காரணமான நிலைகள்,
நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகியிருக்கின்றது.

இன்று நாம் வயல்களில் களைகளை நீக்கினாலும் மீண்டும் முளைத்துவிடுகின்றது. அதைப் போன்று, நாம் மருந்தை உட்கொண்டு நமக்குள் நோயைப் போக்கினாலும் முதலில் ஊழ்வினையாகப் பதிந்திருப்பதை நம்மால் அழிக்கவே முடியாது.
அதைக் குறைக்க முடியுமே தவிர
அழித்துவிடுவோம் என்பதை மறந்துவிடுங்கள்.
2. ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
நான்கு நாட்களுக்குத் தியானிக்கின்றேன் என்றால், இன்று எனக்கு எல்லாக் காரியமும் நடந்தது என்று சொல்வார்கள்.ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் சென்றேன், என் காரியம் நல்லபடியாக நடக்கின்றது என்று கூறுவார்கள்.ஆக, தீய உணர்வுகளைச் சுத்தம் செய்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், ஒருவன் நம்மை எதிர்த்துப் பேசினான் என்றால்,
அவன் உணர்வு நமக்குள் வந்து,
“பாருடா, நான் இவ்வளவு ஆத்ம சுத்தி செய்கின்றேன்..,
எதிர்க்கிறான் பார்”, என்ற உணர்வை எடுத்தவுடன்
ஆத்ம சுத்தி செய்ததைக் காட்டிலும் அவன் உணர்வு அதிகமாகிவிடும். நமக்குள் மறைந்த ஊழ்வினையுடன் சேர்ந்து, நாம் ஆத்ம சுத்தி செய்த நிலையையே மாற்றிவிடும்.

பாலுக்குள் விஷம் பட்டால் எப்படி மறைக்கின்றதோ, அதைப் போல அவனின் உணர்வுகள் ஆன்மாவிலே கலந்துவிடுகின்றது. அந்த உணர்வின் சத்து நமக்குள் இருந்தாலும், ஊழ்வினை என்ற நிலைகளில் இதுவும் மறைக்கின்றது. இவன் பாய்ச்சிய நிலைகளும் வருகின்றது.

இதற்குத்தான் விநாயகர் ஆலயங்களில் இரண்டு பாம்பினைப் போட்டிருப்பார்கள். ஏற்கனவே வினை இருக்கின்றது. விஷம். அதில் பிறிதொருவர் சொல்லும் பொழுது, இரண்டும் பிணைந்து நஞ்சின் தன்மை ஆன்மாவில் பெருகிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை நமக்குள் வந்தவுடன், நமக்குள் என்னதான் நல்ல குணங்கள் இருந்தாலும் செயலற்றதாக இந்த ஆன்மாவிற்குள் சேர்ந்து, நம் உணர்வினை நஞ்சாக மாற்றுகின்றது. முதலில் ஆத்ம சுத்தி செய்தேன், இப்பொழுது ஆத்ம சுத்தியே செய்யவிடமாட்டேன் என்கிறதே என்பார்கள்.
3. நமக்குள் - எல்லாவற்றிற்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலக்கச் செய்யவேண்டும்
உங்களுக்கு மணிக்கணக்கில் திரும்பத் திரும்ப உபதேசம் செய்து கொண்டிருக்கின்றேன். அந்த அருள் ஞானிகளின் உணர்வை, உங்களுக்குள் பதிவு செய்துகொண்டே இருக்கின்றேன்.

ஒவ்வொரு குணங்களுடன் எப்படிக் கலக்கின்றது என்று நினைவு கூர்ந்து, உங்களை அறியாமல் எந்த உணர்வுகளெல்லாம் இயக்குகின்றதோ, எல்லாவற்றிற்குள்ளும் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கச் செய்து, உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.

ஊழ்வினையாகப் பதிவு செய்து, அந்தப் பதிவின் நினைவு கொண்டு நமக்குள் தீமை புகாது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
எங்கள் தீமைகள் விலக வேண்டும்,
விலக வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்தால்தான்,
இது நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து,
எல்லா உணர்வுகளிலும் சேரும்.

நாம் நல்ல குணங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றால், முதலில் இருக்கக்கூடிய தீய குணங்களைத் துடைக்க வேண்டும்.

துடைத்துப் பழகி, அந்த அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று தீய உணர்வைத் துடைக்க வேண்டும்.

ஒரு முறை துடைத்து, மீண்டும் எண்ணம் வந்தால் “ஓம் ஈஸ்வரா” என்று மீண்டும் உயிரை வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று தீய உணர்வைத் துடைக்க வேண்டும்.

அதிலே நினைவு குறைந்தால், மீண்டும் மீண்டும் நினைவுகளைச் செலுத்தி அதைத் துடைத்துவிட்டு, யார் நம்மை ஏசினாரோ
என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்,
என் உணர்வுகள் அவரை நல்லவராக்க வேண்டும்.
என்னைப் பார்க்கும்போது நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று அவரிடமிருந்த வினைகள் நமக்குள் வராதபடி அதை நிறுத்த வேண்டும்.

இப்படித்தான் நம் ஆன்மாவில் பட்ட தீய உணர்வுகளைக் குறைக்க வேண்டும். எமது அருளாசிகள்.