1. மக்களை இயக்கும் உயிரான ஈசனை வணங்க வேண்டும்
அந்த மெய்ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க
சக்திகளை சாதாரண மக்களையும் பெறச் செய்வதற்காக, உபதேசிக்கும் முறைகளை நமது குருநாதர் எமக்குக் காட்டினார்.
உயர்ந்த ஞானத்தின் வித்தை
எப்படி மக்களுக்குள் ஊன்றச்
செய்வது என்றும்,
அவர்கள் நினைவை எப்படிக்
கூட்டச் செய்வது என்றும்,
அதை அவர்கள் நினைவு கூர்ந்து
தியானிக்கும் பொழுது,
அவர்கள் ஊழ்வினையாகப் பதிவு
செய்ததை,
அவர்களை எப்படி நல் உணர்வின்
நிலையாக மாற்ற வேண்டும்
என்று எமக்கு உணர்த்தினார்
குருநாதர்.
ஆகவே, குருநாதர் காட்டிய
அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் இதைப் பெறவேண்டும். மாமகரிஷிகள் அருள் சக்திகள் அனைத்தும்
உங்களுக்குள் நல்ல வினையாகச் சேர்ந்து, தீய வினைகள் அனைத்தும் உங்களுக்குள் வளராது
நிறுத்தும் நிலைக்கே இந்த உபதேசம்.
மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு.
அவர்களைப் படைப்பதும்,
அவர்கள் எண்ணியதை இயக்குவதும்,
எண்ணியதை உடலாக்குவதும்,
உடலானதை விளைவிப்பதும்,
விளைந்ததைத் தன்னுடன் எடுத்துச்
செல்வதும்,
அந்த விளைந்த உணர்வுக்கொப்ப
அடுத்த உடலை உருவாக்குவதும் “உயிரே”
என்று எமக்கு உபதேசித்தார்,
நமது குருநாதர்.
2. எல்லோருக்கும் மெய்ஞானம் பெறும் தகுதி உண்டு
ஆகவே, பிறர் வாழவேண்டும்,
என்று அந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று நீ எண்ணு. அப்படி
எண்ணினாலும், அதைப் பெறக்கூடிய சக்தியாக, ஞானிகளின் நிலையை முதலில் நீ பெற்று உணரமுடியும்.
அதன் பின், அவர்கள் பெறவேண்டும்
என்ற ஏக்க உணர்வுகளை உபதேச வாயிலாக ஊழ்வினையாக அவர்களுக்குள் பதிவு செய்.
அப்படிப் பதிவு செய்து,
அந்த உணர்வுகளை ஆழமாக ஊன்றி,
நினைவலைகளை அவர்களுக்குள்
உந்தச் செய்யும் பொழுதுதான்,
அதனை அவர்கள் பெறும் தகுதியைப்
பெறுகின்றனர்.
ஆகவே, எல்லோரும் பெறும் தகுதியை
ஏற்படுத்தி, அவர்கள் பெறவேண்டும், அவர்கள் பெறவேண்டும், என்று அவர்களை நீ பிரார்த்திக்க
வேண்டும்.
அப்படிப் பிரார்த்திக்கும்
பொழுது, அவர்கள் வளர்த்துக் கொண்ட இந்த உடலுக்குள், அந்த ஒவ்வொரு உயிருக்கும் அருள்
சக்திகள் உடலாக அமைகின்றது என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.