ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2013

ஈஸ்வரனை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை

இமயமலையில் தவம் இருந்தால், 
ஈஸ்வரனைக் காணலாம் என்பார்கள். 
இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள உயிரான ஈஸ்வரனை எண்ணி, தியானம் செய்ய வேண்டும் என்பதற்கே, இவ்வாறு உணர்த்தினார்கள மெய்ஞானிகள்.

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, எமக்குள் பெறச் செய்ததைப் போன்று, உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள், உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்கும், புதிதாக தீயவினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து, உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின், அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால் தான், வளரும். நான் வித்தை ஊன்றிவிட்டேன், என்று சும்மா இருந்தால் வளருமா? 

அருள் ணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால், அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். 

உயிரின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப, மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி, மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி, ஒளியின் உடலைத் தாம் பெற்றார்.

அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை, நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்,
அகஸ்தியரைப் போன்று, நாமும்
நமது உடலில் உள்ள அணுக்களை
சிறுகச் சிறுக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீயவினைகளைத் தணித்து, புது தீயவினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.
இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்ட பின், நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின், நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது, நமக்கு வெறுப்போ, அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? 

இதெல்லாம் நமது உடலில் உள்ள உணர்வுக்கொப்பத் தான் வரும் என்பதனை, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணரவேண்டும். 
தெரிந்து, தெளிந்து,
தெளிவாக வாழ்ந்திடும் வாழ்க்கையாக,
உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
நமக்குக் கோபம் எப்படி வருகின்றது?
வெறுப்பு எப்படி வருகின்றது? என்பதை அறிய வேண்டும்.
நம்மை வெறுப்படையச் செய்வது எது?
வெறுப்பான பின், குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது?
வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை,
நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால், இத்தனை நிலைகளையும் யாம் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டோம். கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குதான், உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.

தீமைகளை நீக்கக்கூடிய சக்தியை, நீங்கள் பெறுவதற்காகத்தான், யாம் உங்களுக்கு உபாயங்களைக் கூறுகின்றோம்.