ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2013

தீங்கு செய்யவேண்டும் என்று எண்ணியவருக்குள்தான் முதலில் அந்தத் தீங்கு விளையும்

1. நம்முடைய ஆசையின் வேகம் என்ன செய்யும்?
ரோட்டில் நாம் நடந்து செல்லுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பக்கம் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். அந்தப் பொருளைப் பார்த்தவுடன் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், ரோட்டின் மறு பக்கம் கடந்து செல்கின்றோம். பஸ் வருகின்றது, மற்றவைகளும் வருகின்றது.

நாம் அந்தப் பொருளின் மேல் எண்ணம் கொண்டு ரோட்டைக் கடப்போமானால், நாம் மறு பக்கம் சென்று பொருளை எடுப்பதற்கு முன் பஸ்ஸினால் தாக்கப்பட்டு, நம் ஆசைகள் அனைத்தும் அடிபட்டுவிடும்.

இதைப் போல, நாம் வேகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தொழில் நாட்டம் ஒன்றை மட்டும் செலுத்தினால் அந்த நாட்டத்தின் வேகம் அதிகமாகும்.

அங்கு மற்றவர்களும் நாம் செய்யும் வியாபாரத்தைப் போல் அதையே செய்யத் தொடங்கினால் அவர்களை எப்படிக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள், நிச்சயம் தோன்றும்.

அந்த எண்ணங்கள் வந்துவிட்டால், அவர்களுக்கு எத்தகைய தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகி அந்த எண்ணத்தின் வித்தை நமக்குள் வளர்த்து, எந்தெந்த வகையில் அவர்களுக்குக் கெடுதல் செய்யவேண்டுமோ அப்படிச் செய்வோம். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வினையாகச் சேர்ந்துவிடுகின்றது.

ஆக, பின் விளைவுகளை எண்ணாமல் ரோட்டைக் கடந்து செல்வது போல் நாம் சென்றால், அவைகள் நம்மை வீழ்த்திவிடும் என்ற எண்ணங்கள் வருவதில்லை.

தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், என் குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணமும், அடுத்தவர்கள் செய்யும் செயலைத் தாங்காத நிலைகள் கொண்டு, அவர்களுக்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகின்றது.
2. பிறருக்குத் தீங்கு செய்யவேண்டும் என்று எண்ணினால், முதலில் நமக்குள்தான் அந்தத் தீங்கு விளையும்
தீங்கான எண்ணங்கள் செயல்படும் பொழுது, அந்த உணர்வின் தன்மையை, தான் சுவாசித்தவுடன் அந்த உயிர் இயக்கி, ஜீவன் பெறச் செய்கின்றது.

ஜீவனான உணர்வுகள் நமது உடலுக்குள் பாய்ந்தபின், அவர்களுக்கு எந்தெந்த வழிகளில் தீங்கு செய்யவேண்டும் என்று
அவர் மறைவிடத்திற்குச் சென்று
அங்கே தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்வதற்கு
நம் கண்ணான புலனறிவு வழிகாட்டும்.

ஆகவே, அந்தத் தீங்கான செயல்கள் செயல்படும் பொழுது, அந்த உணர்வினை ஊழ்வினையாகப் பதிவு செய்து, நாம் எடுத்துச் சுவாசித்த அந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி, அதை ஜீவன் பெறச் செய்து நம்மை அதுவாகவே மாற்றிவிடும்.

கீதையிலே, “நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்”, என்று கண்ணன் சொன்னதாகச் சொல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு நிலைகளிலும், பிறருக்கு நாம் தீங்கிழைக்க எண்ணினால், முதலில் நாம்தான் அதுவாகின்றோம். இந்தத் தீயவினைகளை நமக்குள் சேராது தடுக்கும் நந்நாள்தான் விநாயக சதுர்த்தி.

அதே மாதிரி, ஒருவக்கொருவர் பேச்சு வரும் பொழுது, தன்னைக் காத்திட, கௌரவமாக வளர்த்துக் கொள்ள மற்றவர்களுடன் பேசும் பொழுதே, “அடேயப்பா.., பெரிய ஆள் மாதிரி., எல்லாவற்றிற்கும் நீ பெரியவனா?” என்று சொன்னால் போதும்.

நான்கு பேர் முன்னால் என்னைக் கேவலமாகப் பேசிவிட்டான், “அவனை என்ன செய்கிறேன் பார்” என்று எண்ணினால், அந்த எண்ணம் பழிதீர்க்கும் உணர்வுகளாகி, அந்த உணர்வுகள் நமக்குள் வித்தாகி நம்முடைய நல்ல குணங்களையும் செயலற்றதாக ஆக்கி, நமது நல்ல எண்ணங்கள் செயலாகாதபடி, நமக்குள் வினையாகச் சேர்ந்து, நம்மை அழிக்கும் உணர்வாக வளர்கின்றது.
இதையெல்லாம் நிறுத்த வேண்டும் இதுதான் விநாயக சதுர்த்தி.