ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2013

ஆண்டவன் பெயரைச் சொல்லித் தவறு செய்கின்றனர், ஆண்டவன் யார்?

1. இன்றைய தீவிரவாதத்தின் நிலைகள்
அரசியில் ரீதியில் இன்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் வரும் பொழுது, நாங்கள் ஓட்டளித்தோமே நீங்கள் ஏன் செய்யவில்லை என்ற பகைமை உணர்வைத்தான் ஊட்டுகின்றார்கள்.

காலத்தையும் மற்ற நிலைகளையும், அளந்து பார்க்கும் மனப்க்குவம் இல்லை.
தான் எண்ணியது கிடைக்கவில்லையென்றால்,
பகைமை உணர்ச்சியைத் தூண்டி, யார் தலைவரோ,
அவரைப் பழித்துப் பேசும் நிலை வருகின்றது.

ஆக, பழித்துப் பேசும் உணர்வு வரப்படும் பொழுது, பழிதீர்க்கும் உணர்வாக உருவாகின்றது. அது விரிவடைந்தால், ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் நிலை வருகின்றது. பழி தீர்க்கும் கூட்டமைப்பாக உருவாகின்றது.

தீவிரவாதம் என்ற நிலைகள் கொண்டு, அரசுக்குப் பாதுகாவலராக இருப்பினும், அதைக் கூடப் பொருட்படுத்தாது அரசின் பாதுகாப்பாளர்களையும் தாக்கும் பண்பு வந்துவிட்டது.

அரசின் பாதுகாவலர் அரசு இட்ட கட்டளைப்படி அமைதியை நிலைநாட்டுவதற்காக, தவறு செய்தோரை அழைத்துச் சென்றால், தன் கூட்டமைப்பின் துணைகொண்டு, என் ஆட்களை நீ எப்படிப் பிடித்துச் செல்லலாம்? என்று, அரசின் பாதுகாவலர்களைத் தாக்கும் நிலைகள் தீவிரவாத்ததால் வந்துவிட்டது. இதன்படி, இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம் தோன்றிவிட்டது.

மக்களை அமைதிபடுத்த சட்டங்கள் வந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பண்பு மக்களிடத்திலே இல்லாது போய்விட்டது. ஆக, பண்பு கொண்டு அரசு நம்மை வழி நடத்த வேண்டுமென்று முனைந்தாலும், அந்த முனைப்பு செல்லாக்காசாகி விடுகின்றது.
2. ஆண்டவன் பெயரைச் சொல்லியே தவறு செய்கின்றனர்
உலகில் உள்ளோர், கடவுளை வணங்காதவர் எவரும் இல்லை.
இன்று கடவுளே இல்லை என்று சொன்னாலும்,
ஜாதகம், ஜோதிடம் பார்த்து,
மறைமுகமாகக் கடவுள் இருக்கின்றார் என்று
ற்றுக் கொள்கின்றனர். ஆகவே, புறத்தில் ஒன்றை எடுத்தாலும், அகத்திற்குள் ஒன்றை வளர்க்கின்றனர்.

நாம் வணங்கும் கடவுள் நம்மைக் காக்கும் என்று ஆலயம்தோறும் விளம்பரப்படுத்துகின்றனர். ஆலய வழிபாடுகளைத் துரிதப்படுத்துகின்றனர், அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை செய்து ஆண்டவன் நம்மைக் காப்பான் என்று எண்ணுகின்றனர்.

ஆண்டவனை எண்ணும் பொழுதெல்லாம், ஒருவன் தான் செய்யும் தவறுகளை எண்ணுவதில்லை.

தவறு செய்வதை ஒருவன் கண்டுணர்ந்து,
தவறு செய்கின்றான் என்று சொன்னால்,
அவனைக் குற்றவாளியாக்கி
எதிரி என்ற உணர்வை வளர்த்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக, ஒரு மனிதனிடமிருந்து ஏதாவது கைப்பொருளைப் பெறவேண்டுமென்றால், முன் பணமாகக் கொடுத்து அவன் மனதைக் கவர்ந்து கொள்கின்றோம். ஆனால், வாங்கும் பொழுது உதவி செய்தார் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.

ஆக, வாங்கியபின் இவருடைய எண்ணப்படி ஏதோ ஒரு காரியத்தைச் சொல்வார். கேட்கவில்லையென்றால், அன்று பணம் வாங்கினான். இன்று எதிர்க்கின்றான் என்று பழி சுமத்தி பகைமை உணர்வுகளை ஊட்டுவார்.

ஆண்டவனை வணங்கும் பொழுது, இந்த நியாயத்தை வெளிபடுத்துகின்றான். ஆண்டவா அவனுக்கு உதவி செய்தேன். அவன் இப்படிப் பழிதீர்க்கும் உணர்வைக் கொண்டுவருகின்றான்.
உன்னையே நான் வணங்குகின்றேன்.
உன்னையே நான் நேசிகின்றேன்.
உன்னையே நான் சதா நினைக்கின்றேன்.
நான் உதவியவனே எனக்கு எதிரியாக வருகின்றான்.
நீ பார்கின்றாயா? என்ற உணர்வின் வேகத்தில் துடித்தபின், பழிதீர்க்கும் உணர்வைத் தனக்குள் வளர்த்து, சந்தர்ப்பம் வரும் பொழுது அவனை வீழ்த்திட வேண்டுமென்ற உணர்வுதான் வருகின்றது.

ஆக, நாம் வணங்கும் கடவுள் என்ன செய்தார்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வழிபடுகின்றோம், விரதமிருக்கின்றோம், எல்லாம் இருக்கின்றோம். இருப்பினும் இந்த உணர்வின் துணைகொண்டு, ஆண்டவனிடத்தில் சொல்லி,
தவறு செய்தவனை நான் கொல்லுகிறேன் என்று
தன்னை நியாயப்படுத்தி,
மற்ற மக்களைக் கொன்று குவிக்கின்றான்.
இவன் தவறு செய்கின்றான் என்று ஆண்டவன் இவர்களுக்கு உபதேசிக்கவில்லையா?
3. நம்மை ஆண்டுகொண்டிருப்பது நம் உயிரே
ஆண்டவன்  அறியாது எதுவும் நடக்க முடியாது என்று காரணமும் கூறுகின்றனர். அப்பொழுது நம்மை ஆள்வது யார்? நமது உயிரே. நாம் எண்ணிய உணர்வை உடலாக்கி, உணர்வின் தன்மை ஆளுவது நம் உயிரே.

யாருக்கும் தெரியாது மறைமுகமாக எண்ணி, என் வாழ்க்கையை உயர்த்த மற்றொருவரை நான் பழி சுமத்தினால், இந்த உணர்வின் தன்மை எனக்குள் வளர்ந்து, பகைமை உணர்வு கொண்ட உணர்வாக விளைகின்றது. ஆக, எனக்குள் கடுமையான நோய் விளைகின்றது. அப்பொழுது நம்மை ஆள்வது யார்? நமது உயிரே.

ஆக, உயிரின் தன்மை துடிப்பு கொண்டு
அணுவை உருவாக்கும் பொழுது,
ஈசன் என்று காரணப்பெயரை வைத்தார்கள்.
4. ஆறாவது அறிவின் துணை கொண்டு பகைமையை அகற்ற வேண்டும்
மனிதனானபின், ஆறாவது அறிவின் துணை கொண்டு, தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்ந்தால், இந்த உயிர் ஈசனாக இருந்து, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்.

அதனை நாம் உருவாக்கினால், தீமையை அகற்றும் உணர்வை ஒன்றாக்கப்படும் பொழுது, பகைமை என்ற நிலைகள் அங்கே மறைகின்றது.

கவே, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் போரொளியை, விஷத்தை ஒடுக்கும் அந்த உணர்வை நாம் வளர்த்தல் வேண்டும். அதை உருவாக்குதல் வேண்டும். அதனால்தான், ஆறாவது அறிவை பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று ஞானியர்கள் இதை வர்ணித்தனர்.

இந்த ஆறாவது அறிவால், கார்த்திகேயா என்று நல்லவை கெட்டவை என்று அறியும் பருவம் வருகின்றது. அதன் வழிகொண்டு பகைமை உணர்வுகள் வளராது, அருள் ஒளியின் சுடரை நாம் எண்ணி எடுக்கும் பொழுது உயிர் அந்த அணுவின் தன்மையை உருவாக்குகின்றது.

வலுகொண்ட அணுக்கள் நமக்குள் உருவாக்கப்படும் பொழுது, மனிதனின் நல்ல குணங்களைப் பாதுகாக்கின்றது. இந்த ஆறாவது அறிவை இதற்காகத்தான் சேனாதிபதி என்று பெயரை வைத்தார்கள் ஞானிகள்.