ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2013

மெய்ஞானிகளின் ஆற்றல் என்னும் அங்குசத்தை வைத்து, நஞ்சை அடக்க முடியும்

1. மூஷிகவாகனா, நாம் சுவாசிப்பதுதான் நமக்கு வாகனமாக வருகின்றது
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைகளை எடுத்து, தனக்குள் தாழ்ந்த நிலைகளளை அமுக்கி, உயர்ந்ததைப் பெரும் சக்தியாக, முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். ஆக, கணங்களுக்கு எதை அதிபதியாக்க வேண்டும்?

ஆதிமூலம் என்பது உயிர். நாம் எண்ணியது அனைத்தையும் இயக்குவது உயிர் என்ற நிலைகளுக்கொப்ப மூஷிகவாகனா (நாம் சுவாசிப்பது, மூச்சு -- வாகனமாக அது நம்மை அழைத்துச் செல்கின்றது)
2. நம்மைக் காத்திடும் நல்ல உணர்வுகள் எதனால் நஞ்சாக மாறுகின்றது?
ஆக, வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் எதைச் சுவாசிக்கின்றோம்? பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் சொன்னபடி கேட்கவில்லையென்றால் வேதனையைச் சுவாசிக்கின்றோம். அந்த வேதனையைச் சுவாசித்து, அடிக்கடி இந்த உணர்வின் தன்மை நமக்குள் விஷத்தை வினயாகச் சேர்க்கின்றோம்.

பையனை நன்றாக வளர்க்க வேண்டும் என்கிற பொழுது, நமக்குள் வேதனை என்ற நஞ்சினை வளர்த்து,  நம் பையன் மேல் இருக்கக்கூடிய அன்பைக் கெடுத்து, பையனை எண்ணும் பொழுதெல்லாம் வேதனைப்படுகின்றோம்.

அதே மாதிரி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றோம். நாம் எண்ணியபடி வியாபாரம் சரிவர நடக்கவில்லையென்றால் என்ன எண்ணுகின்றோம்?

எவ்வளவு சிரமப்பட்டு நான் கடையை வைத்தேன்? வியாபாரம் சரியாகவில்லையே, என்று எண்ணி வேதனைப்படுகின்றோம். இந்த விஷத்தைச் சுவாசிக்கும் பொழுது வேதனை, அது மூஷிகவாகனா. ஆக, தொழில் செய்கிறோம் லாபம் வரவில்லையென்றால் வேதனைப்படுகின்றோம்.

அதைப் போல நம் வாழ்க்கையில் நம் நண்பன் என்ற நிலையில் பாசம் இருந்தால், அவர் கஷ்டம் என்று சொல்லும் பொழுது, நாம் வேதனையான உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

அதே போல சகோதரர்களுக்குள் ஒருவருகொருவர் வீட்டுக்குள் பாகப்பிரிவினை என்று வந்துவிட்டால், எனக்கு அதிகம், உனக்கு அதிகம் என்று குடும்பத்திற்குள் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.

இன்று மனிதன் என்ற தன்மையில் எல்லோரும் தன்னை மதிக்க வேண்டும் என்று வைராக்கியத்தை வைத்துக்கொண்டிருந்தால், சிலர் நம்மை மதிக்காமல் விட்டுவிட்டால், என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்று வேதனைப்படுகின்றோம்.

அது பழி தீர்க்கும் உணர்வுகளாக வந்துவிடுகின்றது. “இருக்கட்டும், அவனை ஒரு கை பார்க்கிறேன்” என்று அகம் கொண்ட உணர்வைச் சுவாசித்து, இந்த வினைகள் உடலுக்குள் சென்று நல்ல குணங்களுடன் கலந்து, நம் நல்ல குணத்தையே அழித்துவிடுகின்றது.

சகோதரர்களுக்குள் இப்படி என்றால், தொழிலில் கூட்டு வியாபாரம் செய்கின்றோம். அவர் தன் வழிக்கு ஒத்து வரவில்லையென்றால், வேதனைப்படுகின்றோம்.

உடனே அவர் மேல் சந்தேகப்படுகின்றோம். சந்தேகப்படும் உணர்வுகள் நமக்குள் விளைந்தபின், அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் சந்தேகமும், அதனால் பிரிவினை வந்துவிடுகின்றது.

கடைசியில், என்னை மோசம் பண்ணினான் என்ற எண்ணங்கள் வருகின்றது. என்னை ஏமாற்றிவிட்டான், பணத்தை அபகரித்துவிட்டான், என்ற நிலைகளில் நீதான் ஏமாற்றினாய் என்று ஒருவருக்கு ஒருவர் பேசி, இந்த வினைகளை நமக்குள் வளர்த்து, வேதனை என்ற நஞ்சினைத் தான் வளர்க்கின்றோம்.

ஆக, நமக்குள் காத்திடும் உணர்வுகள் அனைத்திலுமே வேதனை எனும் நஞ்சு கலந்துவிடுகின்றது.
3. மெய்ஞானிகளின் ஆற்றலை (அங்குசத்தை) வைத்து,  நஞ்சை அடக்க முடியும்
நம் உடலைத் தீயிலே போட்டாலும் இந்த உடல்தான் கருகும். ஆனால், உயிர் வேகுவது இல்லை. அதைப் போல
மெய்ஞானிகள் தங்கள் உணர்வுகள் அனைத்தையும்
உயிருடன் ஒன்றி, வேகாத நிலைகளில் மாற்றி,
நஞ்சினை நீக்கி, நஞ்சை ஒளியாக மாற்றி,
மெய் உணர்வு பெறும் ஆற்றலாக
அந்த உடலிலிருந்து வெளிப்பட்டு,
அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து,
அது சக்திவாய்ந்த நிலைகளாக நமது பூமியில் இருக்கின்றது.
விண்வெளியிலும் இருக்கின்றது.

அதைத் தான் வேகாக்கலை என்று விநாயக சதுர்த்தியாக, அந்த மெய்ஞானிகள் தங்கள் உடலிலே வந்த தீய வினைகளை நிறுத்தி, தனக்குள் இருள் சூழும் நிலைகளை வீழ்த்தினார்கள். வேகாக்கலையாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யானை பெரியதாக இருந்தாலும், அங்குசத்தைப் போட்டு அடக்குவது போல மனிதன் எண்ணம் கொண்டு நஞ்சினை அடக்கி ஆள வேண்டும் என்ற நிலைக்குத்தான் விநாயகர் கையிலே அங்குசத்தைப் போட்டது. ஆகவே, தீயவினைகளை அடக்கும் சக்தியாக, மெய்ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் சேர்ப்போம்

நம் வாழ்க்கையில் நம்மையறியாது சேரும் பகைமை உணர்வுகள், பாசத்தால் எடுத்துக் கொண்ட வேதனைகள், தொழிலில் முன்னேற முடியவில்லை என்ற வேதனைகள், இதைப் போன்றவைகள் நமக்குள் தொடர்ந்து வருவதை நிறுத்துவதற்காகத்தான், விநாயக சதுர்த்தி என்ற நந்நாளை ஞானிகள் உருவாக்கினார்கள்.